தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படுவது உறுதியானது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறிஉள்ளார்.
கடந்த 2014–ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அமைக்கப்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணியில், பா.ம.க., தே.மு.தி.க., ம.தி.மு.க. போன்ற கட்சிகள் இடம் பெற்றிருந்தன. தற்போது நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. தனியாக போட்டியிடுவதாக அறிவித்து, அதன் முதல்–அமைச்சர் வேட்பாளராக டாக்டர் அன்புமணி ராமதாசை முன்னிறுத்தி உள்ளது.
தே.மு.தி.க. இந்த தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என்பதை கடந்த 20–ந் தேதி காஞ்சீபுரத்தில் நடைபெற்ற கட்சியின் மாநாட்டில் விஜயகாந்த் அறிவிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அந்த மாநாட்டில் விஜயகாந்த் எவ்வித முடிவையும் தெரிவிக்காமல், கிங்கா? கிங் மேக்கரா? என்ற கேள்வியை தொண்டர்கள் மத்தியில் கேட்டுவிட்டு, எவ்வித பதிலையும் தெளிவாக கூறாமல் மதில் மேல் பூனையாகவே இருந்து வருகிறார்.
இந்நிலையில் சென்னை வந்திருக்கும் பாரதீய ஜனதா கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை சந்தித்து பேசினார். சுமார் 45 நிமிடங்களுக்கு மேலும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜவடேகர், விஜயகாந்த் உடனான கூட்டத்தினால் மகிழ்ச்சி அடைகின்றேன், விஜயகாந்த் உடனான சந்திப்பு சுமூகமாக நடைபெற்றது, பயனுள்ளதாக இருந்தது. கடந்த 24 மணி நேரங்களில் எங்களுடைய கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்தியதில் மகிழ்ச்சியாகும். ஆலோசனைகள் குறித்து டெல்லியில் பாரதீய ஜனதா தலைமையகம் மற்றும் பிரதமர் மோடியிடம் விவரிக்கப்படும். பிற கூட்டணி கட்சிகளுடனும் ஆலோசிக்கப்படும். டெல்லி சென்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் மீண்டும் தமிழகம் வருவேன். கூட்டணி தொடர்பான முடிவு அடுத்த வாரம் தெரியவரும். கூட்டணி தொடர்பான இறுதியான முடிவை விஜய்காந்த் எங்களிடம் தெரிவிக்கவில்லை. தமிழகத்திற்கு அனைத்து வகையிலும் மோடி தலைமையிலான மத்திய அரசு உதவி செய்து வருகிறது.
தமிழகத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட பணம் மத்திய அரசு வழங்கியது. ரேசன் கடைகளில் இலவச அரிசி வழங்கப்படுவதும் மத்திய அரசின் நிதிஉதவியினால் தான். மத்தியில் மோடி தலைமையிலான சிறப்பான ஆட்சி நடைபெறுகிறது, அதுபோல் தமிழகத்திலும் ஏற்படுத்தப்படும். தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சிகள் மாறிஉள்ளது, ஆனால் காட்சிகள் மாறவில்லை, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதியானது. சரியான நேரத்தில் மீண்டும் சென்னை வந்து பேச்சுவார்த்தை நடத்துவேன்” என்று கூறினார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.