தமிழக பள்ளிக்கல்வித்தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”இந்தியாவில் 10-ம் வகுப்பு பயிலும் மாணவர்களின் கற்கும் திறன், மாநில வாரியான கல்வித்தரம் ஆகியவற்றை அறிய தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு அண்மையில் நடத்திய தேசிய சாதனை கணக்கெடுப்பின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழக மாணவர்களின் கற்றல் திறன், தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் தரம் ஆகியவை பெரும் அதிர்ச்சியும், கவலையும் அளிக்கின்றன.
கணக்கெடுப்புக்காக நடத்தப்பட்ட தேர்வுகளில் மாணவ, மாணவிகள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில், எல்லாப் பாடங்களிலும் கடைசி 5 இடங்களைத் தான் தமிழகத்தால் பிடிக்க முடிந்துள்ளது. மாநில மொழிப் பாடத் தேர்வில் தமிழகத்திற்கு 18 ஆவது இடமும், கணிதத் தேர்வில் கடைசி இடமும், ஆங்கிலம், சமூக அறிவியல் பாடத்தேர்வில் 23-வது இடமும் கிடைத்துள்ளது. அறிவியலில் மட்டும் தான் ஓரளவு முன்னேறி 20 ஆவது இடத்தை எட்டிப் பிடிக்க முடிந்திருக்கிறது. இது மிக மிக மோசமான நிலையாகும்.
மாணவர்களின் கற்றல் திறனும், மாநில பாடத்திட்டத்தின் கல்வித் தரமும் இந்த நிலையில் இருந்தால், தேர்வுகளில் விடைத்தாள் திருத்தப்படும் விதமும் தமிழகத்தில் மிக மோசமான நிலையில் இருப்பது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் விடைத்தாள்கள் திருத்தப்படும் போது மாணவர்களுக்கு மதிப்பெண்கள் தாராளமாக வாரி வழங்கப்படுவதையே இது காட்டுகிறது.
தங்களின் ஆட்சியில் தான் மாணவர் தேர்ச்சி விகிதம் அதிகரித்தது என்று காட்டிக் கொள்வதற்காக இரு கட்சிகளின் அரசுகளும் மதிப்பெண் வழங்குவதில் தாராளம் காட்டுகின்றன. அதன்விளைவு தான் 10 மற்றும் 12 ஆம் வகுப்புத் தேர்வுகளில் 90% மதிப்பெண் பெற்றவர்கள் கூட மருத்துவம் & பொறியியல் படிப்பில் சாதிக்க முடியாமல் திணறுகின்றனர்.
தமிழகத்தில் கற்பித்தல் முறை, பாடத்திட்டம் ஆகியவற்றை அடியோடு மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதையே தேசிய சாதனைத் தேர்வு முடிவுகள் காட்டுகின்றன. தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் தரம் குறைவாக இருப்பதும் இந்த ஆய்வில் தெரியவந்திருக்கிறது. அரசு பள்ளிகளில் போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இல்லாமல், ஒவ்வொரு பாடத்திற்கு சிறப்பு ஆசிரியர்களை நியமிக்காமல் அறிவியல், கணித ஆசிரியர்களையே மொழிப்பாடங்களையும் நடத்த வைப்பது, பல பள்ளிகளில் வகுப்பறைகளே இல்லாமல் ஒரே அறையில் ஒன்றுக்கும் மேற்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்துவது ஆகியவை தான் கல்வித்திறன் குறைவதற்கு காரணம் ஆகும்.
தேசிய சாதனைக் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ள முடிவுகளை படிப்பினையாகக் கொண்டு, மாநிலப் பாடத்திட்டத்தை மாற்றியமைத்தல், கல்வித்தரத்தை உயர்த்துதல் ஆகியவை குறித்து பரிந்துரை அளிக்க கல்வியாளர்கள் குழுவை அமைக்க வேண்டும். அக்குழுவின் பரிந்துரைகளை எந்தவித சமரசம் செய்து கொள்ளாமல் நடைமுறைப்படுத்தி கல்வித்தரத்தை உயர்த்த அரசு முன்வர வேண்டும்” என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.