‘ஜெயலலிதாவைத் திருப்திப்படுத்துவதற்காக அமைச்சர்கள் காட்டுமிராண்டித்தனமான கலாச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்’.- டாக்டர் ராமதாஸ் கண்டனம்.
’அறிவியலும், தொழில்நுட்பமும் வளரும் போது நாகரீகமும் வளர வேண்டும் என்பது தான் இயற்கை விதி. ஆனால், தமிழகத்தில் இதற்கு எதிரான கலாச்சாரத்தை விசுவாசம் என்ற பெயரில் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர் அ.தி.மு.க.வினர். அந்த கலாச்சாரம் நாகரீகத்தை வளர்ப்பதற்கு பதிலாக அடிமைத் தனத்தையும், காட்டுமிராண்டித் தனத்தையும் வளர்த்துக் கொண்டிருக்கிறது என்பது தான் கொடுமை.
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதாவின் 68-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மக்களுக்கு தொல்லை தரும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு கட்டமாக சென்னை வேளச்சேரியில் 668 பேருக்கு பச்சை குத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கட்டாயப்படுத்தியும், காசு கொடுத்தும் அழைத்து வரப்பட்டவர்களின் கைகளில் ஜெயலலிதாவின் படம் பச்சை குத்தப்பட்டது. அப்போது வாக்களிக்கும் வயதை எட்டாத பள்ளி மாணவி ஒருவருக்கு கட்டாயப்படுத்தி பச்சைக் குத்தப்பட்டது. இதனால் ஏற்பட்ட வலியை தாங்கிக் கொள்ள முடியாமல் அம்மாணவி கதறி அழுகிறார்;. ‘‘என்னால் வலி தாங்க முடியவில்லை. தயவு செய்து என்னை விட்டு விடுங்கள்’’ என்று கதறுகிறார். ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் சில பெண்கள் அவரை பிடித்துக் கொள்ள அவருக்கு பச்சை குத்தி முடிக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இந்தக் கொடுமையை பார்த்து குலுங்கி குலுங்கி சிரிக்கின்றனர். இக்காட்சிகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு வாட்ஸ்-அப்பில் வலம் வருகின்றன.
அமைச்சர்கள் எனப்படுபவர்கள் மக்கள் நலன் காப்பவர்களாக இருக்க வேண்டும். பொதுமக்களுக்கு ஏதேனும் சிக்கல் என்றால் அதைக் களைபவர்களாக இருக்க வேண்டும். அந்த இலக்கணத்தின்படி வலி தாங்க முடியாமல் கதறும் மாணவியை மீட்டு, அவருக்கு பச்சை குத்தியதால் ஏற்பட்ட காயத்துக்கு மருத்துவம் அளிக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அதை செய்யாமல் மாணவியின் அலறலையும், கதறலையும் ரசித்துப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்ததை பார்க்கும் போது, முதுகை வளைத்து அடிமைகளைப்போல குனிந்தே நின்று பழக்கப்பட்டதால் அவர்களுக்கு மனிதநேயம் மரத்துப் போய் விட்டதோ? என்ற ஐயம் ஏற்படுகிறது. மிகப்பெரிய மனித உரிமை மீறல் கண்ணுக்கு முன் நடந்த போது, அதை வேடிக்கைப் பார்த்த இவர்கள் அமைச்சர்களாக நீடிக்கும் தகுதியை இழந்து விட்டனர்.
பச்சைக் குத்திக் கொள்வது என்பது அழகியல் சார்ந்த கலையாகவும், அக்குபஞ்சர் மருத்துவமாகவும் பார்க்கப்படுகிறது. ஆனால், தனி மனிதர்களின் உருவத்தை கட்டாயப்படுத்தி பச்சைக் குத்தி விடுவது அடிமைகளின் அடையாளமாகவே பார்க்கப்படுகிறது. பழங்காலத்தில் எதிரி நாட்டின் மீது போர் தொடுத்து வசப்படுத்தும் மன்னர்கள், அந்த நாட்டின் மக்கள் அனைவரும் தங்களின் அடிமைகள் என்பதைக் குறிக்கும் வகையில் அவர்கள் மீது தங்கள் உருவத்தை பச்சைக் குத்தி விடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அப்படி ஒரு கலாச்சாரத்தைத் தான் ஜெயலலிதா இப்போது பரப்பிக்கொண்டிருக்கிறார். ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது காளைகள் துன்புறுத்தப்படுவதாகக் கூறி போர்க்கொடி உயர்த்தி, தடை வாங்கியவர்கள், இக்காட்டுமிராண்டித் தனத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
குனிந்து வணங்கியவர்களுக்கு கட்சிப் பதவி, காலில் விழுந்து வணங்கியவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் பதவி, இந்த இரண்டையும் செய்வதுடன் மண் சோறு சாப்பிடுதல், அலகு குத்தி காவடி எடுத்தல், தீச்சட்டி ஏந்துதல் போன்றவற்றையும் செய்பவர்களுக்கு அமைச்சர் பதவி என்று அடிமைக் கலாச்சாரத்தை முதலமைச்சர் ஜெயலலிதா திட்டமிட்டு வளர்த்து வருவது தான் இது போன்ற காட்டு மிராண்டித்தனங்களுக்கு அடித்தளமாக அமைகிறது.
இந்த கொடிய, அடிமைக் கலாச்சாரத்தை விதைத்த ஜெயலலிதாவும், அதற்கு துணை நின்ற அமைச்சர்களும் மக்கள் மன்றத்தில் விரட்டியடிக்கப்படுவார்கள்.
அதற்கு முன் அவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். பள்ளிச் சிறுமிக்கு துடிக்க, துடிக்க பச்சை குத்திய அதிமுக நிர்வாகிகள், அதற்கு துணையாக இருந்த அமைச்சர்கள், ஊக்குவித்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோர் மீது தேசிய மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும். சட்டப்படி தண்டனை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.’’ இவ்வாறு தமது அறிக்கையில் கூறியுள்ளார் டாக்டர் ராமதாஸ்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.