திமுக – காங் இடையே தொகுதிப் பங்கீட்டில் இழுபறி. த.மா.காவும் சேரும் என்று திமுக நம்பிக்கை.
கடந்த வாரம் புதன்கிழமை சுபமுகூர்த்த தினத்தன்று காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் குலாம்நபி ஆசாத், முகுல் வாஸ்னிக், இருவரும் சென்னை வந்து தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார்கள். தி.மு.க. கூட்டணியில் வேறு பெரிய கட்சிகள் இல்லாததால் தங்களுக்கு 2011–ல் ஒதுக்கீடு செய்தது போல 63 தொகுதிகள் ஒதுக்கி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அதை கேட்டதும் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கும், ஸ்டாலினுக்கும் அதிர்ச்சி ஏற்பட்டது. அந்த அளவுக்கு தொகுதிகள் தர இயலாது என்று கூறிய அவர்கள், அதற்கான காரணத்தை விளக்கி கூறினார்கள்.
தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க. வராததால் மேலும் ஒரு கட்சியை சேர்க்க வேண்டும். மேலும் இந்த தடவை தி.மு.க. அதிக இடங்களில் போட்டியிட முடிவு செய்துள்ளது. எனவே 20 தொகுதிகளுக்கு மேல் தர இயலாது என்று கருணாநிதி உறுதிபட தெரிவித்தார்.
20 இடம் போதாது என்றனர். இதையடுத்து 25 இடங்கள் தருகிறோம் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
அதையும் ஏற்க மறுத்த குலாம்நபி ஆசாத், டெல்லி சென்று பேசி விட்டு வருகிறோம் என்று கூறி சென்றார். டெல்லியில் அவர் சோனியா, ராகுல் இருவரையும் சந்தித்து தி.மு.க. 25 இடங்களே தருவதாக சொன்ன தகவலை கூறினார்.
அதை கேட்டதும் சோனியா, ராகுல் இருவரும் கடும் அதிருப்தி அடைந்தனர். இதைத் தொடர்ந்து தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் டெல்லி சென்றார்.
சோனியா, ராகுல் இருவரிடமும் இளங்கோவனால் முழுமையாக ஆலோசனை நடத்தி முடிக்க முடியவில்லை. சோனியா, ராகுல் இருவருமே தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு 45 முதல் 50 தொகுதிகளை பெற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் காங்கிரசுக்கு செல்வாக்கு இருப்பதாக சுட்டிக்காட்டும் ராகுல் 45 தொகுதிக்கு குறையாமல் பெற வேண்டும் என்று குலாம்நபி ஆசாத்திடம் உத்தரவிட்டுள்ளார். இதில் குலாம்நபி ஆசாத்தும், இளங்கோவனும் எத்தகைய முடிவு எடுப்பது என்பது புரியாமல் தவித்தப்படி உள்ளனர்.
இதனால்தான் தி.மு.க. – காங்கிரஸ் தொகுதி பங்கீடு சர்ச்சைக்கு இன்னமும் தீர்வு ஏற்படாமல் உள்ளது.
இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் தொடர்ந்து டெல்லியில் முகாமிட்டுள்ளார். மேலிட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வரும் அவர் அது தொடர்பாக தி.மு.க. தலைவர்களுடன் போனில் பேசி வருகிறார்.
நாளை (வெள்ளிக்கிழமை) அவர் சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளார். அவருடன் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் குலாம்நபி ஆசாத், முகுல் வாஸ்னிக் இருவரும் மீண்டும் வருகிறார்கள்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி, ஸ்டாலினை அவர்கள் நாளையே சந்தித்து பேச திட்டமிட்டுள்ளனர். அப்போது அவர்கள் 45 முதல் 50 இடங்கள் கேட்டு வலியுறுத்துவார்கள் என்று கூறப்படுகிறது.
ஆனால் தி.மு.க. தரப்பில் காங்கிரசுக்கு 30 இடங்களை கொடுக்கும் முடிவில் உள்ளனர். குலாம்நபி ஆசாத் வற்புறுத்தினால் அது 33 ஆக உயர வாய்ப்பு உள்ளது.
33 இடங்களுக்கு மேல் நிச்சயமாக காங்கிரசுக்கு ஒருஇடம் கூட அதிகமாக கொடுக்க இயலாது என்று தி.மு.க. மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.
தி.மு.க. கூட்டணியில் த.மா.கா.வும் இடம் பெறும் பட்சத்தில் காங்கிரசுக்கு 25 இடங்களே கிடைக்கும் என்கிறார்கள். இன்னும் ஓரிரு நாளில் இதில் முடிவு ஏற்படும் என்று தி.மு.க. – காங்கிரஸ் இரு கட்சிகளின் நிர்வாகிகளும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.