உ.பி. சட்டசபை தேர்தல்: மோடியின் வாரணாசி தொகுதியில் இருந்து பிரசாரத்தை தொடங்கும் சோனியா
உத்தரப்பிரதேசம் மாநிலத்துக்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அம்மாநிலத்தை 27 ஆண்டுகளாக மாற்றுக்கட்சியினர் தலைமையிலான ஆட்சிகள் சீரழித்ததை சுட்டிக்காட்டும் வகையில் ‘27 சால் உ.பி. பேஹால்’ என்ற தேர்தல் பிரசார ரத யாத்திரையை நடத்த காங்கிரஸ் தலைமை முடிவு செய்தது.
இதன் முதல்கட்டமாக, டெல்லியில் இருந்து கான்பூர் வழியாக உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சுமார் 600 கிலோமீட்டர் தூரத்துக்கு பயணித்து தேர்தல் பிரசாரம் செய்யும் முதல் ரத யாத்திரை பஸ்சை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கடந்த 23-ம் தேதி டெல்லியில் கொடியசைத்து, தொடங்கி வைத்தனர்.
உத்தரப்பிரதேசத்தின் மேற்கு பகுதியில் உள்ள நான்கு மாவட்டங்கள் வழியாக தினமும் பிரசாரம் செய்யும் இந்த பஸ் யாத்திரை இன்றுமாலை தேதி மொராதாபாத் நகரை சென்றடையும். இதேபோல், இங்குள்ள மேலும் 30 மாவட்டங்களிலும் காங்கிரசாரின் பிரசார பயணம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகஸ்ட் 2-ம் தேதி பிரதமர் மோடியின் எம்.பி. தொகுதியான வாரணாசி நகரில் இருந்து தனது பிரசாரத்தை தொடங்குகிறார்.
டெல்லியில் இருந்து விமானம் மூலம் வாரணாசி நகரை வந்தடையும் சோனியா காந்தி திறந்த காரில் நகரின் பல பகுதிகளில் ஊர்வலமாக சென்று தனது சூறாவளி பிரசாரத்தை தொடங்குவார் என டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது.
அவருடன் சுமார் 15 ஆயிரம் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்களில் காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் அணிவகுத்து செல்ல சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
திறந்த காரில் ஊர்வலமாக சென்று மக்களிடையே ஆதரவு திரட்டும் சோனியா காந்தி, இங்கிலீஷ் லைன் பகுதியில் உள்ள பண்டிட் கம்லாபதி திரிபாதி சிலை அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
சோனியாவின் மாமியாரும் மறைந்த பிரதமருமான இந்திரா காந்தி முன்னர் வாரணாசி நகரில் இதுபோன்ற சூறாவளி பேரணிகளை நடத்தி மக்களிடையே ஓட்டுவேட்டை நடத்தியதையும், அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்ததையும் சுட்டிக்காட்டும் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தியின் இந்த பேரணியால் நிச்சயமாக இங்கு நாங்கள் மீண்டும் ஆட்சியை பிடிப்போம் என்று நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.