மாயாவதியை அவமதித்த விவகாரம்: தலைமறைவான தயாசங்கர் சிங் பீகாரில் கைது
உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதியை பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் தயாசங்கர் சிங் தரக்குறைவாக விமர்சித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. இதனையடுத்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
அதேசமயம், தயாசங்கர் சிங் மீது லக்னோ காவல் நிலையத்தில் புகாரும் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இதனால், தயாசங்கர் சிங் தலைமறைவானார். அவரை கைது செய்வதற்கு தீவிரம் காட்டிய லக்னோ போலீசார், உத்தரபிரதேச போலீசார் நீதிமன்றத்தை அணுகி கைது வாரன்ட்டும் பெற்றனர். இதையடுத்து கைது செய்ய தடை விதிக்கக்கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தயாசங்கர் சிங் மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில், பீகார் மாநிலத்தின் புக்சர் நகரில் தயாசங்கர் சிங் தலைமறைவாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பீகார் சென்ற உ.பி. போலீசார், உள்ளூர் போலீசாரின் உதவியுடன் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, புக்சரில் பதுங்கியிருந்த தயாசங்கர் சிங்கை கைது செய்தனர். பின்னர் அவர் உத்தரபிரதேசத்திற்கு கொண்டு வரப்படுகிறார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.