‘குடகு மாவட்ட தமிழ்ப் பள்ளிகளை தரம் உயர்த்துங்கள்’- சித்தராமய்யாவுக்கு தமிழ் அமைப்புகள் கோரிக்கை.
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் ஏராளமான காபித்தோட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டம் கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இதனால் இங்குள்ள காபித்தோட்டங்களில் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளாவிலிருந்தும் ஏராளமான தொழிலாளிகள் வந்து வேலைப் பார்க்கின்றனர். இந்த தொழிலாளிகளின் குழந்தைகள் கல்வி கற்க வசதியாக குடகு மாவட்டத்தில் அரசு சார்பில் மொத்தம் 6 பிறமொழி பள்ளிகள் தொடங்கப்பட்டன. இதில் 4 தமிழ்ப் பள்ளிகள், 2 மலையாளப் பள்ளிகள் ஆகும்.
இந்த தமிழ்ப் பள்ளிகள் கெட்டதல்லா, பாலிபெட்டா, குட்டா, பி.செட்டிக்கேரி ஆகிய இடங்களிலும் மலையாள பள்ளிகள் மாகுட்டா, சித்தாப்புரா ஆகிய இடங்களிலும் உள்ளன. இந்தப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்புவரை மட்டுமே பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தவேண்டும் என்று காபித்தோட்டங்களில் வேலை செய்துவரும் தமிழக கேரள மாநிலத் தொழிலாளர்களும் பல்வேறு தமிழ் அமைப்பினரும் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் 5ம் வகுப்புக்கு மேல் படிப்பதற்கு வசதி இல்லையென்பதனால் இதுபோன்ற பள்ளிகளில் சேரும் ஆர்வம் வெகுவாகக் குறைந்துவருகிறது. ஆரம்பத்தில் 200க்கும் அதிகமான மாணவர்கள் படித்துவந்த இந்தப் பள்ளிகளில் தற்போது 100க்கும் குறைவானவர்களே படிக்கிறார்கள். இது குறித்து காவிரி தமிழ் அமைப்பு தலைவர் ராஜா கூறுகையில் “தமிழ் மற்றும் மலையாள பள்ளிகளுக்கு மாணவர்கள் வருகை குறைவாக இருப்பதாலும், ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதாலும் அந்தப் பள்ளிகளை மூடுவதற்கு அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. எக்காரணம் கொண்டும் பள்ளிகளை மூடக்கூடாது. மாறாக, பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டும். சிறந்த ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி சித்தராமய்யாவிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
மாவட்டக் கல்வி அதிகாரி பசவராஜூ கூறும்போது “தமிழ் மற்றும் மலையாளப் பள்ளிகளில் சிறந்த ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுத்தாலும் பள்ளிகளுக்கு மாணவர்கள் வருகை குறைவாகவே உள்ளது” என்றார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.