செல்போன் போல் யோகாவும் உங்கள் வாழ்வில் நீங்கா இடம் பெறட்டும்: பிரதமர் மோடி
உலக யோகா தினத்தை முன்னிட்டு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “உடலும், உள்ளமும் நலமாக இருக்க ஒவ்வொருவரும் யோகா பயிற்சியை தங்கள் வாழ்க்கையின் அங்கமாகக் கொள்ள வேண்டும்” என்றார்.
மேலும், “உங்கள் வாழ்வில் செல்போன் நீங்கா இடம் பெற்றுள்ளது போல் யோகாவும் இடம்பெற வேண்டும். யோகா பயிற்சி மேற்கொள்வதால் உடல் நலன் சீரடையும்” என்றார் அவர்.
பிரதமர் நரேந்திர மோடி விடுத்த கோரிக்கையின்பேரில், ஆண்டுதோறும் ஜூன் 21-ம் தேதி உலக யோகா தினமாக கொண்டாடப்படும் என ஐ.நா. அறிவித்தது.
முதலாவது யோகா தினம் கடந்த ஆண்டு கொண்டாடப்பட்டது. 2-வது யோகா தினம் உலகம் முழுவதும் இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது.
பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் உள்ள கேபிடல் வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் 35 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாக சிறு உரையாற்றிய அவர், “உடலும், உள்ளமும் நலமாக இருக்க ஒவ்வொருவரும் யோகா பயிற்சியை தங்கள் வாழ்க்கையின் அங்கமாகக் கொள்ள வேண்டும்.
உங்கள் வாழ்வில் செல்போன் நீங்கா இடம் பெற்றுள்ளது போல் யோகாவும் இடம்பெற வேண்டும். யோகா பயிற்சி மேற்கொள்வதால் உடல் நலன் சீரடையும்.
உடல் உபாதைகளில் இருந்து விடுபடுவதற்காக மட்டுமல்ல, யோகா பயில்வதால் முழுமையான ஆரோக்கியத்தைப் பெற முடியும்.
யோகா செய்வதன் மூலமாக நீரிழிவு நோய் பாதிப்பை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். இந்த ஆண்டு முழுவதும் யோகா மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம் என்ற விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்த உறுதியேற்போம்.
இதுபோல் ஒவ்வொரு ஆண்டும் யோகா தினத்தன்று வெவ்வேறு நோய்களுக்கு யோகா எப்படித் தீர்வாகும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். ஆனால் ஓராண்டுக்கு ஒரு நோயை மட்டுமே முன்னிறுத்தி யோகா விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வோம்” என்றார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.