வைகோவை விஜயகாந்த் கூட்டணியைவிட்டு வெளியேற்ற வேண்டும் – பாஜகவின் எச்.ராஜா சொல்கிறார்.
பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளரும் தியாகராய நகர் தொகுதி வேட்பாளருமான எச்.ராஜா அளித்த பேட்டி விவரம் வருமாறு:–
கேள்வி: கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஒரு மாற்று அணியை உருவாக்கினீர்கள். இந்த தேர்தலில் கூட்டணி அமையாமல் போனதற்கு என்ன காரணம்?
பதில்: பாராளுமன்ற தேர்தலில் எங்களோடு கூட்டணியில் இருந்த கட்சி தலைவர்களுக்கு அப்போது பிரதமர் ஆசை இல்லை. ஆனால் இப்போது சிலருக்கு முதல் – மந்திரி ஆசை ஏற்பட்டு விட்டது.
4 பேருக்கு 4 விதமான ஆசை. அன்புமணி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு விட்டார். ஒருத்தர் நான் ‘கிங்’ ஆகத்தான் இருப்பேன் என்று உறுதியாக இருந்தார். இதுதான் முட்டுக்கட்டை ஆகிவிட்டது.
கே: ரஜினி ‘வாய்ஸ்’க்கு ஒவ்வொரு முறையும் முயற்சிக்கிறீர்கள். பிரதமர் மோடி நட்பு பாராட்டி நேரில் சென்றார். அப்படியும் உங்களுக்கு அவர் வாய்ஸ் கொடுக்காதது ஏன்?
ப: பாரத நாட்டின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் நரேந்திர மோடி. தேசிய சக்திகளின் கேப்டன் மோடி. முன்னேற்றத்தின் ஹீரோ. மோடியின் வாய்சை பெற்ற வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். மோடியின் வாய்சுக்கு அவ்வளவு வலிமை இருக்கிறது.
கே: நீங்கள் கேரள பொறுப்பாளராக இருக்கிறீர்கள். அங்கு பல பிரபலங்கள், நடிகர்கள் தேர்தலில் களம் இறக்கப்பட்டுள்ளார்கள். தமிழகத்தில் அப்படி ஒரு நிலை உருவாகவில்லையே?
ப: உண்மைதான். இங்கும் எங்களிடம் ஏன் பிரபலங்கள் இல்லை? எஸ்.வி.சேகர், காயத்ரி ரகுராம், விஜயகுமார், நெப்போலியன், கங்கை அமரன், கஸ்தூரி ராஜா போன்றோர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நிர்வாகிகளாகவும் ஆக்கப்பட்டுள்ளார்கள். தேர்தல் நேரத்தில் அவர்களின் பங்களிப்பு தெரியவரும்.
கே: கூட்டணிக்காக ‘பேரம்’ நடந்ததாக எழுந்துள்ள விமர்சனம் பற்றி என்ன கருதுகிறீர்கள்? உண்மையில் கோடிக்கணக்கில் பேரங்கள் நிகழ்த்தப்படுவது உண்மை தானா?
ப: விஜயகாந்தின் மனைவி பிரேமலதா எந்த பேரமும் நடக்கவில்லை என்று தெளிவாக பதில் சொல்லிவிட்டார். ஆனாலும் பேரம் நடந்ததாக குற்றம் சாட்டிய வைகோ மன்னிப்பு கோர வேண்டும்.
அல்லது பொய்யான தகவல்களை கூறும் வைகோ அந்த கூட்டணியில் இருக்கக்கூடாது என்று விஜயகாந்த் கூற வேண்டும்.
வைகோ வாய்க்கு வந்தபடி பேசுபவர். எந்த குற்றச்சாட்டை சொன்னாலும் அதை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும்.
நான் 1998 முதல் பல கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறேன். பண பேரங்கள் நடந்ததில்லை. தொகுதி எண்ணிக்கை, செயல்திட்டங்கள் தான் பேசப்படும்
இவ்வாறு அவர் கூறினார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.