கற்பழிப்பு வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீம்-க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சி.பி.ஐ நீதிமன்றம் தீர்ப்பு
அரியானா மாநிலத்தை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரகீம்சிங். இவர் தன்னைத் தானே கடவுள் என்று அறிவித்துக் கொண்டு வட மாநிலங்களில் 100-க்கும் மேற்பட்ட ஆசிரமங்கள் அமைத்து செயல்பட்டு வருகிறார்.
இவருக்கு இந்தியாவிலும், பல்வேறு நாடுகளிலும் சுமார் 6 கோடி ஆதரவாளர்கள் உள்ளனர். அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா உள்பட பல நாடுகளில் இவருக்கு சுமார் 300 ஆசிரமங்கள் உள்ளன. பல ஆயிரம் கோடி சொத்துகளுக்கு இவர் அதிபதியாக உள்ளார்.
இவர் மீது கடந்த 2002-ம் ஆண்டு பாலியல் பலாத்கார புகார் செய்யப்பட்டது. ஆசிரமம் பெண்கள் 2 பேரை இவர் கற்பழித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பான வழக்கு ரோத்தக் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
14 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த வழக்கில் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பை வெளியிட்ட கோர்ட்டு, குர்மீத் ராம்ரகீம் சிங்கை குற்றவாளி என்றும்
அவருக்கு தண்டனை விவரம் இன்று வெளியிடப்படும் என்று அறிவித்தது. இதைத் தொடர்ந்து அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், டெல்லி
ஆகிய 5 மாநிலங்களில் அவரது ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த கலவரத்தில் 38 பேர் கொல்லப்பட்டனர். 250 பேர் காயம் அடைந்தனர்.
கோடிக்கணக்கான மதிப்புடைய அரசுக்கு சொந்தமான சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. இதற்கிடையே குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட குர்மீத்
ராம்ரகீம்சிங் ரோத் தக்கில் உள்ள சுனரியா சிறையில் அடைக்கப்பட்டார். அந்த சிறைக்கு செல்லும் அனைத்து சாலைகளும் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளன. அந்த சிறையை சுற்றி ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டிருந்தனர்.
தண்டனை விபரங்கள் இன்று அரியானாவில் மிகப் பயங்கர வன்முறை சம்பவங்கள் நடக்க வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை
விடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து பஞ்சாப், அரியானா, தலைநகர் டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேரா சச்சா
அமைப்பின் 103 வழிபாட்டு மையங்களை போலீசார் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
3 மாநிலங்களிலும் பெரும் பாலான பகுதிகளில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. வன்முறை ஏற்படலாம் என்று கருதப்படும் இடங்களில் ராணுவ வீரர்கள் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
சிறைக்குள் சி.பி.ஐ. கோர்ட்டு அமைக்கப்பட்டுள்ள நிலையில், தண்டனை விபரங்களை அறிவிப்பதற்காக நீதிபதி ஜெகதீப் சிங்கை குர்மீத்
அடைக்கப்பட்டுள்ள சுனரியா சிறைக்கு ஹெலிகாப்டரில் போலீசார் அழைத்துச் சென்றனர். மதியம் 2.30 மணிக்கு தீர்ப்புக்கான இரு தரப்பு வாதப்-பிரதிவாதம் தொடங்கியது.
குர்மீத் ராம் ரகீம்க்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என அரசு வழக்கறிஞர் நீதிபதியிடம் கேட்டுக்கொண்டார். சாமியார் தரப்பில் வாதாடிய
வழக்கறிஞர், ‘குர்மீத் ராம் ரகீம் ஒரு சமூகப்பணியாளர். மக்கள் நலப்பணியில் ஈடுபட்டுள்ளவர். எனவே, நீதிபதி கருணையுடன் தீர்ப்பளிக்க வேண்டும்’
என நீதிபதியிடம் கேட்டுக்கொண்டார். அப்போது சாமியார் தனக்கு மன்னிப்பு வேண்டும் என நீதிபதி முன் கதறி அழுததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, இறுதி வாதங்கள் நிறைவடைந்ததும் நீதிபதி ஜெகதீப் சிங் தீர்ப்பு விபரங்களை வாசித்தார். கற்பழிப்பு குற்றத்திற்காக சாமியார் குர்மீத்
ராம் ரகீம்க்கு 10 ஆண்டுகள் தண்டனை விதிப்பதாக நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
நீதிபதி தீர்ப்பை அறிவித்தவுடன் போலீசார் சாமியாரை மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் சென்றனர். தீர்ப்பு விபரங்கள் வெளியானதும் சிஸ்ரா பகுதியில் கலவரங்கள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என சாமியார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்
வெளியாகியுள்ளது.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.