வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையின் ஒரு பகுதிதான்ஒலிம்பிக்கில் இந்தியா பதக்கம் வெல்லாதது குறித்து பிரதமர் மோடி கருத்து.
ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஒரு பதக்கத்தை கூட இந்திய அணியினர் வெல்லவில்லையே.., என்ற வருத்தத்தில் இந்திய மக்கள் இருக்கும் நிலையில் ஒலிம்பிக் பதக்க வாய்ப்பை நழுவவிட்டவர்களுக்கு மோடி ஆறுதல் கூறும் விதமாக வெற்றியும் தோல்வியும் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
டெல்லியில் நாளை நடைபெறும் சுதந்திர விழாவின்போது என்ன பேசலாம்? என்று ஆலோசனை கூறுமாறு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி சமீபத்தில் கேட்டிருந்தார். ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய அணியினருக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பிரதமர் உரையாற்றலாம் என ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க சென்றுள்ள இந்திய அணியின் நல்லெண்ண தூதரான சச்சின் தெண்டுல்கர் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த கருத்தை வரவேற்றுள்ள பிரதமர் மோடி, ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய அணியினருக்கு ஊக்கம் அளிப்பதற்காக சுதந்திர தினம்வரை ஏன் காத்திருக்க வேண்டும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக தனது டுவிட்டரில் இன்று கருத்து தெரிவித்துள்ள அவர், ‘நமது விளையாட்டு வீரர்களை எண்ணி இந்தியா பெருமை கொள்கிறது.
ரியோ சென்றுள்ள ஒவ்வொரு இந்திய வீரர்-வீராங்கனையின் சகிப்புத்தன்மையும், மன உறுதியும், அர்ப்பணிப்பு உணர்வும் நம்மை எல்லாம் பெருமை கொள்ள வைக்கிறது. இவர்கள் எல்லாம் இந்தியாவின் பெருமிதம் ஆவார்கள்.
தங்களது கடுமையான உழைப்பின் மூலம் அவர்கள் ரியோ ஒலிம்பிக் போட்டியை சென்றடைந்துள்ளனர். வெற்றியும், பின்னடைவுகளும் வாழ்க்கையின் ஒருபகுதியாகும்.
ரியோ ஒலிம்பிக்கில் இன்னும் உள்ள போட்டிகளில் பங்கேற்கவுள்ள நமது வீரர்-வீராங்கனைகள் தங்களுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, முடிவு என்னவாக இருக்கும்? என்ற அழுத்தம் இல்லாமல் சிறப்பாக விளையாட வேண்டுமென வலியுறுத்துகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
-ரயன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.