இலங்கையில் புதுப்பிக்கப்பட்ட யாழ்ப்பாண துரையப்பா விளையாட்டு மைதானத்தை மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்துவைத்தார்.
இலங்கையில் தமிழர்கள் பகுதியான யாழ்ப்பாணத்தில் துரையப்பா விளையாட்டு அரங்கம் உள்ளது.
இலங்கை போரின் போது இந்த விளையாட்டு அரங்கம் சேதமானது. இதனால் 1997-ம் ஆண்டு முதல் இந்த விளையாட்டு மைதானம் பயன்படுத்தப்படாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் ரூ.7 கோடியில் இந்த விளையாட்டு அரங்கம் இந்திய அரசால் புனரமைக்கப்பட்டது. இதில் 1,850 பேர் அமரும் வகையில் இட வசதி அமைக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் இந்திய அரசால் புதுப்பிக்கப்பட்ட யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு அரங்கம் இன்று திறக்கப்பட்டது.
இலங்கை அதிபர் சிறிசேனா முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்தவாறு வீடியோ கான்பரசிங் மூலம் இந்த விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்தார். விழா நிகழ்ச்சிகளையும் அவர் டெல்லியில் இருந்தவாறே பார்த்தார். அவருடன் மத்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜூவும் உடன் இருந்தார்.
யாழ்ப்பாணம் விளையாட்டு அரங்க திறப்பு நிகழ்ச்சிகள் சிங்களம் மற்றும் தமிழ் மொழியில் நடத்தப்பட்டது.
இந்த விழாவில் பேசிய நரேந்திர மோடி,
சென்ற ஆண்டு மார்ச் மாதம் நான் யாழ்ப்பாணத்தில் பயணம் மேற்கொண்டிருந்தேன். அப்போது யாழ்ப்பாண மக்கள் எனக்களித்த அன்பான வரவேற்பு இன்னும் என் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது. அது வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள். ஏனெனில் அந்த நாளில்தான் இந்தியப் பிரதமர் ஒருவர் யாழ்ப்பாணம் வருவது முதல் முறையாக நிகழ்ந்தது.
இன்றைய தினம் மற்றொரு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த தினமாகும். இன்று நம்மிரு நாடுகளுக்குமிடையே உள்ள பங்கேற்பு பண்பை இலங்கை மக்கள் யாழ்ப்பாண மக்கள் ஆகியோருடன் மீண்டும் கொண்டாடுகிறோம். இன்று அதிபர் சிரிசேனாவும் நானும் இணைந்து துரையப்பா விளையாட்டு அரங்கை இலங்கை மக்களுக்கு அர்ப்பணித்து வைத்துள்ளோம். இதில் நாங்கள் தனியாக இல்லை. இன்றைய அதிநவீன தொலைத் தொடர்பு கருவிகள் இந்தியாவின் 125 கோடி மக்களை இலங்கையின் நட்புள்ளம் கொண்ட மக்களுடன் இணைத்து இந்தக் கொண்டாட்டங்களின் பங்கேற்கச் செய்துள்ளன.
நண்பர்களே, 20 ஆண்டுகள் காத்திருந்த பிறகு உங்களது கைதட்டுதல்களும் மகிழ்ச்சிக் கோஷமும் மீண்டும் துரையப்பா அரங்கின் உணர்வைப் பிரதிபலிக்கின்றன. ஆயிரக் கணக்கான கிலோ மீட்டர் தூரத்திற்கப்பால் தில்லியில் அமர்ந்துள்ள நாங்கள், உங்கள் மனத்துடிப்புகளையும் யாழ்ப்பாணத்தின் மாற்றுச் சூழலையும் உணர்ந்து கொள்ள முடிகிறது. துரையப்பா விளையாட்டரங்கம் வெறும் செங்கல்லாலும் சுண்ணாம்பாலும் உருவாக்கப்பட்டதல்ல. அது நம்பிக்கை மற்றும் பொருளாதார வளர்ச்சியின் சின்னம். யாழ்ப்பாண இளைஞர்களின் எதிர்கால வளத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் உகந்த ஒரு களம். நீங்கள் வன்முறையைக் கைவிட்டு பொருளாதார வளர்ச்சிப் பாதையில் தொடர கொண்டுள்ள மன உறுதியை அது வெளிப்படுத்துகிறது. அதன் அடித்தளங்கள் உங்களது வீரம் மற்றும் தியாகத்தால் தாங்கப்பட்டுள்ளது. அரங்கம் வெற்றிகரமாக மறுசீரமைக்கப்பட்டுள்ளது, நீங்கள் கடந்த காலத்தை பின்னுக்குத் தள்ளி வளமான எதிர்காலத்தை நம்பிக்கையுடன் நோக்குவதைக் காட்டுகிறது. இவ்வாறு பேசினார்.
புதுப்பிக்கப்பட்ட இந்த விளையாட்டு அரங்கில் முதல் பெரிய நிகழ்ச்சியாக 2-வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. 8 ஆயிரம் மாணவ, மாணவிகள் யோகா செயல் விளக்க நிகழ்ச்சியில் பங்கேற்று சாதனை புரிந்தனர்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.