‘நீதிக்காகக் காத்திருக்கிறேன். ஆனால் தீவிர வெறுப்பு பிரச்சாரத்தை கையாளுகின்றன இந்திய ஊடகங்கள்’: மல்லையா சாடல்
இந்திய ஊடகங்கள் தனக்கு எதிராக தீவிரமான வெறுப்புப் பிரச்சாரத்தைக் கையாள்வதாக விஜய் மல்லையாக சாடியுள்ளார்.
ரூ. 9000 கோடி கடனைத் திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்குத் தப்பி ஓடிய இந்திய தொழிலதிபர் மல்லையா. அவரை இந்தியா அழைத்துவர பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அவர் கடந்த ஏப்ரல் 18-ம் தேதி லண்டன் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
அதைத் தொடர்ந்து வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கைது செய்யப்பட்ட சில மணிநேரங்களிலேயே அவருக்கு 6,50,000 டாலர்கள் பிணைத் தொகையின்பேரில், நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்நிலையில் விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்கும் வழக்கு நேற்று(செவ்வாய்க்கிழமை) இங்கிலாந்து வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இங்கிலாந்தில் உள்ள மல்லையா நேரில் ஆஜரானார்.
அப்போது வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 6-ம் தேதியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த வழக்கின் முடிவில் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க நீதிபதி உத்தரவிட்டால், அடுத்த இரு மாதங்களுக்குள் இங்கிலாந்து உள்துறைச் செயலாளர் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க உத்தரவிடுவார்.
வழக்கு விசாரணை முடிந்ததும் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மல்லையா, ”எனக்கு எதிராக இந்திய ஊடகங்கள் விதைக்கும் வெறுப்பு பிரச்சாரத்துக்கு எல்லையே இல்லை. இந்திய அரசு பதிவு செய்துள்ள வழக்கு இன்று இங்கிலாந்து நீதிமன்றத்தின் முன் இருக்கிறது. தீர்ப்புக்காகக் காத்திருங்கள்” என்று கூறியுள்ளார்.
அடுத்த முறை வழக்கு விசாரணையின் போது போது நீதிமன்றத்தில் பத்திரிகையாளர்களை அனுமதிக்கக்கூடாது என்று நீதிபதிகளிடம் மல்லையா கோரிக்கை வைத்துள்ளார். நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய மல்லையா, தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்ததுடன், கடன்களை வேறு வகைகளில் திருப்பிவிடவில்லை, அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளேன் என்று குறிப்பிட்டார். மேலும் தான் நிரபராதி என்பதற்கான அனைத்து ஆதாரங்களும் உள்ளன என்றும் மல்லையா கூறினார்
லண்டனில் நடைபெற்ற இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியைக் காண வந்த விஜய் மல்லையாவை, இந்திய ரசிகர்கள் கேலி செய்தனர். நீல நிற பிளேசர் அணிந்திருந்த மல்லையா, புகழ்பெற்ற ஜேக் ஹாப்ஸ் நுழைவுவாயில் வழியாக உள்ளே நுழைந்தார். அப்போது அவரைக் கண்ட இந்திய ரசிகர்கள் சிலர் ”திருடன், திருடன்” என்று கத்தத் தொடங்கினர்.
ஒரு ரசிகர் அவரைப் படம் பிடிக்க, மற்றொருவரோ ”மைதானத்துக்குள் திருடன் நுழைவதைப் பாருங்கள்” என்று கத்தினார்.
இதுகுறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியபோது, ”மைதானத்தில் குடித்திருந்த இருவர் மட்டுமே, ”திருடன், திருடன்” என்று கூறினர். மற்ற ரசிகர்கள் அனைவரும் என்னிடம் வந்து பேசிச் சென்றனர்” என்று தெரிவித்தார்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.