விஜய் ஒரு அன்பான போலீஸ்: இயக்குநர் அட்லீ
‘ராஜா ராணி’ படத்தில் காதல் தோல்விக்குப் பிறகும் காதல் இருக்கிறது என்று சொன்னார் இயக்குநர் அட்லீ. இப்போது விஜய்யோடு ‘தெறி’ வேகத்தில் திரும்பியிருக்கிறார். பிரம்மாண்டமான வியாபாரம், ட்ரெய்லருக்கு வரவேற்பு என்ற பரபரப்புக்கு மத்தியில் அட்லீயைச் சந்தித்துப் பேசியதிலிருந்து…
ட்ரெய்லரில் வரும் விஜயகுமார் – ஜோசப் – தர்மேஸ்வர் இந்த மூன்று விஜய் பாத்திரங்களைப் பற்றிச் சொல்லுங்கள்.
விஜயகுமார் ஒரு அன்பான போலீஸ். இதுவரை கம்பீரமான, மிடுக்கான போலீஸ் அதிகாரிகளைத்தான் திரையில் பார்த்திருப்போம். நம் குடும்பத்தில் ஒரு போலீஸ் அதிகாரி இருந்தால் எப்படிப் பார்ப்போமோ அப்படிப்பட்ட ஒரு போலீஸாக இருப்பார். ரொம்ப உறுதியான ஒருத்தரை அன்பு கலந்து பார்க்கலாம்.
ஜோசப் ஒரு அப்பா எப்படி இருக்க வேண்டும் என்பதைக் காட்டுவார். இப்படி ஒரு அப்பா இருக்க வேண்டும் என்று அனைத்துக் குழந்தைகளும் விரும்பக்கூடிய வகையில் இருப்பார். தர்மேஸ்வர் பாத்திரம் மட்டும் சஸ்பென்ஸ். அது ஒரு முக்கியமான பாத்திரம். அதை மட்டும்தான் இப்போது சொல்ல முடியும்.
இப்படத்தில் எனக்குப் பிடித்த ஒரு விஜய் இருக்கிறார். அவருடைய ரசிகர்களுக்குப் பிடித்த மாஸ் விஜய்யும் இருக்கிறார். இந்த இரண்டையும் தாண்டி அவருடைய குடும்பத்துக்கும் நண்பர்களுக்கும் மட்டுமே தெரிந்த ஒரு விஜய் இருக்கிறார். இது 3 வேடமா, 3 தோற்றங்களா என்பதை இப்போது நான் சொல்ல விரும்பவில்லை.
‘தெறி 2’ எப்போது ஆரம்பிக்கப் போகிறீர்கள்?
இதுவரை இரண்டாம் பாகத்தைப் பற்றி யோசிக்கவே இல்லை. ஆனால், எல்லாருமே என்னை யோசிக்க வைக்கிறார்கள். ஆனால், விஜய்யோடு இணைந்து படம் பண்றேன். அது ‘தெறி 2′ ஆக இருக்கலாம், வேறு ஒரு படமாகவும் இருக்கலாம். அதைக் காலம்தான் முடிவு பண்ண வேண்டும்.
இப்படத்தில் விஜய் பல ஆபத்தான காட்சிகளில் நடித்திருப்பதாகச் சொல்கிறார்களே?
ஒரு படத்துக்கு எவ்வளவு ரிஸ்க் எடுத்திருக்கிறார்கள் என்பதைத் தாண்டி ஒரு கதைக்காக எவ்வளவு மெனக்கெடுகிறார்கள் என்பதுதான் முக்கியம். குழந்தைகளோடு நடிக்கும்போது அந்தக் குழந்தையின் பக்குவத்துக்கு வந்து நடிக்க வேண்டும். அதற்கே ஒரு பெரிய அர்ப்பணிப்பு வேண்டும். திடீரென்று குழந்தை வசனத்தைத் தப்பாக பேசிவிடும். அந்தச் சமயத்தில் ஒரு நடிகராகப் பொறுமையுடன் இருப்பதுதான் அர்ப்பணிப்பு. அதே போல இப்படத்தில் நிறைய காட்சிகள் இருக்கின்றன. ரிஸ்க் என்றால் 90 அடி உயரம் இருக்கக்கூடிய ஒரு பாலத்திலிருந்து தண்ணீரில் குதித்திருக்கிறார் விஜய். அது பெரிய ரிஸ்க்கான காட்சி. இன்னும் ஒருசில காட்சிகள் இருக்கின்றன. அதையெல்லாம் படம் வந்தவுடன் சொல்கிறேன்.
மூத்த இயக்குநர் மகேந்திரன் நடிப்பை ஒரு இயக்குநராக எப்படிப் பார்க்கிறீர்கள்?
மகேந்திரன் சார் ஒரு குழந்தை. குழந்தை என்பதைத் தாண்டியும் ஒரு பெரிய ஆதரவாக இருப்பவர் அவர். படப்பிடிப்பில் அவர் இருந்தார் என்றால் அவருடைய படங்களைப் பற்றி பேசுவோம். ‘ராஜா ராணி’ படத்துக்கு அவருடைய படங்கள்தான் உத்வேகம் அளித்தன. இதை நான் அவரிடமே சொல்லியிருக்கிறேன். ஒரு காட்சியை எப்படி அமைக்க வேண்டும், இசை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அவர்தான் பெரிய உத்வேகம். அவரே என்னுடைய இயக்கத்தில் நடிக்கும்போது சந்தோஷப்பட்டேன்.
அவரை நிறைய வேலை வாங்கியிருக்கிறோம். அவர் ரொம்ப மென்மையானவர். அந்த மென்மையிலிருந்து உறுதியான ஒருவரைக் கொண்டுவந்திருக்கிறோம். அது அவருக்கும் எங்களுக்கும் ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அவர் என்னை எப்போதும் ‘கோச்’ என்று அழைப்பார். நான் ‘கோச்’ எல்லாம் இல்லை. என்ன வேண்டுமோ அதை நடித்துக் காட்டுவேன்; அதை அப்படியே அவர் நடித்துவிடுவார் அவ்வளவுதான்.
முதல் படத்தில் உங்கள் நண்பர் ஆர்யாவை இயக்கினீர்கள், இரண்டாவது படத்தில் பெரிய நட்சத்திரமான விஜய். ஏதாவது வித்தியாசத்தை உணர்ந்தீர்களா?
இரண்டுமே எனக்கு முதல் படம் மாதிரிதான். ஆர்யாவுக்கு அட்லீ எப்படி இயக்குவார் என்பது தெரியாது. விஜய்யைப் பொறுத்தவரை இதற்கு முன்பு நான் பண்ணியது ஒரு காதல் படம். ‘தெறி’ ஆக்ஷன் கலந்த படம். இரண்டு பேரும் முதல் நாள் படப்பிடிப்பு பார்த்துவிட்டு, இந்தப் பையன் பண்ணிவிடுவான் என்று நட்போடு பழக ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால், எனக்குத்தான் எதிர்பார்ப்பைத் தாண்டி எப்படிப் பண்ணப் போகிறோம் என்ற எண்ணம் இருந்தது. என்னைப் பொறுத்தவரை ‘ராஜா ராணி’ 10-ம் வகுப்பு பரீட்சை என்றால் ‘தெறி’ 12ம் வகுப்பு பரீட்சை.
தயாரிப்பாளர் அவதாரம் எப்படி இருக்கிறது? தொடர்ச்சியாகப் படம் தயாரிக்கும் திட்டம் வைத்திருக்கிறீர்களா?
தயாரிப்பை ஆரம்பித்தது சம்பாதிப்பதற்காக அல்ல. எனக்கென்று சின்னதாக ஒரு பெயர் உருவாகியிருக்கிறது. அதை வைத்துக்கொண்டு எனது உதவி இயக்குநர்களுக்கும் மேலும் பல நல்ல இயக்குநர்களுக்கும் வாய்ப்பு அளிக்கலாம் என்று யோசித்தேன். என்னால் ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்தோடு கைகோக்க முடிந்தது. ஒரு படம் ஆரம்பித்திருக்கிறேன். தொடர்ச்சியாக நிறைய படங்கள் பண்ணுவேன். என்னைச் சுற்றி இருப்பவர்களுக்கும், நல்ல கதையை வைத்துக்கொண்டு அறிமுகத்துக்காகக் காத்திருக்கும் உதவி இயக்குநர்களுக்கும் என்னால் முடிந்ததைக் கண்டிப்பாகச் செய்வேன். இது முழுக்க முழுக்க படைப்புக்கானது மட்டுமே.
மீண்டும் புதுமுகங்கள், சிறு நடிகர்களை வைத்துப் படம் இயக்குவீர்களா?
கதை என்ன கேட்கிறதோ அதைப் பண்ணித்தான் ஆக வேண்டும். நான் மகேந்திரன் சாரை ஒரு உதாரணமாக எடுத்துக்கொண்டுதான் இயக்குநராகவே வந்தேன். ஷங்கர் சாரோடு பணியாற்றினேன். கமல் சாரோடு பணியாற்றிவிட்டுதான் ‘ஜீன்ஸ்’ படம் பண்ணினார் ஷங்கர் சார். திடீரென்று ‘பாய்ஸ்’ என்று 5 புதுமுக நாயகர்களை வைத்துப் படம் பண்ணினார். ஒரு கதை கேட்கிறது என்றால் அதற்குத் தகுந்தவாறுதான் பணியாற்ற முடியும். பெரிய நாயகர்களுடன் மட்டுமே பணியாற்றுவது எனக்குச் சரியாக வருமா எனத் தெரியவில்லை. ‘ராஜா ராணி’ 2-ம் பாகம் என்று 4 இளைஞர்களை வைத்துக்கூடப் பண்ணலாம். எல்லாப் பெரிய நாயகர்களோடும் பணியாற்ற வேண்டும் என்பது என் கனவு.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.