அமைச்சர் விஜயபாஸ்கரை உடனே பதவியிலிருந்து நீக்குக: ஸ்டாலின்
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை உடனடியாக பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரின் 100 ஏக்கர் நிலங்களும், குவாரிகளும் வருமான வரித்துறையால் முடக்கப்பட்டு இருக்கின்றன. அமைச்சர் பதவியை தவறாகப் பயன்படுத்தி, குவாரியில் அனுமதிக்கப்பட்டதை விட மூன்று மடங்கு கற்களை வெட்டி எடுத்துள்ளார் என்றும் வருமான வரித்துறை கண்டுபிடித்திருக்கிறது.
2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட போது, தனக்கும் – தன் மனைவிக்கும் 78 ஏக்கர் நிலங்கள் இருப்பதாக தனது வேட்புமனுவில் கூறியுள்ள விஜயபாஸ்கர், 2016 சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது 139 ஏக்கருக்கு மேல் நிலங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். அனுமதிக்கப்பட்ட அளவைவிட மூன்று மடங்குக்கு மேல் குவாரியிலிருந்து ப்ளூ மெட்டலை வெட்டி எடுத்துவிட்டு, 2016 சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவில் தனக்கும், தன் மனைவிக்கும் 9 கோடி ரூபாய்க்கு மேல் கடன் இருப்பதாக தேர்தல் ஆணையத்திற்கு கணக்குக் காட்டியிருக்கிறார்.
மூன்று பங்கு அதிகமாக வெட்டி எடுத்து அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்திய அந்த பணம் எங்கே போனது? அரசுக்குப் போக வேண்டிய இவ்வளவு பணத்தை கொள்ளையடித்த அமைச்சர் விஜயபாஸ்கர் கடனில் இருக்கிறேன் என்று தேர்தல் ஆணையத்திற்கு கணக்கு காட்டியது ஏன்? தேர்தல் ஆணையத்திற்கு அளித்த வேட்புமனுவில் மொத்த வருமானத்தை மறைத்து, குறைத்துக் காட்டியது ஏன்?
2011க்கும் 2016க்கும் இடையில் 61 ஏக்கருக்கு மேல் அதிகமான நிலங்களைக் தனது சொத்தாகக் காட்டியிருக்கும் அமைச்சர் விஜயபாஸ்கர், தன்னிடமும் – தன் மனைவியிடமும் வெறும் 12.98 லட்சம் ரூபாய் மட்டுமே கையிருப்பு ரொக்கம் இருக்கிறது என்றும் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். இது 2011 ஆம் ஆண்டு அவர் காட்டிய 11.98 லட்சம் ரூபாய் என்ற கையிருப்பு ரொக்கத்தை விட ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே அதிகம்!
ஆனால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது அமைச்சரின் வீட்டில் கைப்பற்றப்பட்ட மாமூல் வசூல் பட்டியலில், ஒரு மாத ஊழல் பணம் வசூல் மட்டும் 5.16 கோடி ரூபாய் என்று தெரிய வந்துள்ளது. ஏன் அமைச்சர் சுகாதாரத்துறை அமைச்சருக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து ரொக்கமாக வருமான வரித்துறை கைப்பற்றிய பணம் மட்டுமே ஏறக்குறைய 5 கோடி ரூபாய். அவரிடமிருந்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்ததாக கைப்பற்றப்பட்ட பட்டியலின் மொத்த மதிப்பு ரூபாய் 89 கோடி. தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்த வேட்பு மனுவில், தன் கையில் 7 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் மட்டுமே இருக்கிறது என்று கணக்கு கொடுத்தவருக்கு, ரொக்கமாக 94 கோடி ரூபாய் எப்படிக் கிடைத்தது?
இதுதவிர, தடை செய்யப்பட்ட போதைப்பொருளான குட்காவை தாராளமாக விற்பனை செய்ய, அமைச்சர் விஜயபாஸ்கர், போலீஸ் கமிஷனர்களாக இருந்த டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் உள்ளிட்டோர் வாங்கியதாக வருமான வரித்துறை சுட்டிக்காட்டியுள்ள லஞ்சத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் பெற்ற தொகைக்கான கணக்கு எங்கே? இப்போது புதுக்கோட்டை குவாரியில், மணல் மாபியா சேகர் ரெட்டிக்கும் தொடர்பு உண்டு என்றும், அமைச்சர் விஜயபாஸ்கரின் சமையல்காரர் சுப்பையா பெயரில் கணக்கு வழக்குகள் நடத்தப்பட்டுள்ளது என்றும் வெளிவந்துள்ள செய்திகளும் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.
ஆகவே, அமைச்சர் விஜயபாஸ்கர் தேர்தல் கமிஷனுக்குக் கொடுத்த வேட்பு மனுக்களில் தெரிவித்துள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டு, ‘குவாரி முதல் குட்கா’ வரை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்துள்ள ஊழல்களை, வாக்களித்த மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், வருமான வரித்துறை அம்பலப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
பல்வேறு வருமானங்களை மறைத்து, கையிருப்பு ரொக்கத்தைக் குறைத்துக் காட்டி, கடன்களை திட்டமிட்டு அதிகரித்துக் காட்டி, கோடி கோடியாக ஊழல் பணம் சம்பாதிக்கும் அவசரத்தில், லட்சக்கணக்கான மாணவர்களின் மருத்துவக் கனவை சீர்குலைக்கும் நீட் தேர்வை அமல்படுத்தி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தமிழக மாணவர்களின் எதிர்காலக் கனவுகளையும் சீரழித்து விட்டார்.
அதுமட்டுமின்றி, வருமான வரித்துறையின் உத்தரவுப்படி, விஜயபாஸ்கரின் நிலங்களை முடக்கி உத்தரவு பிறப்பித்த புதுக்கோட்டை மாவட்ட பதிவாளர் சசிகலா, அதிரடியாக மாற்றப்பட்டு பழி வாங்கப்பட்டுள்ளார். அரசு கஜானாவை சுரண்டியதும் இல்லாமல், அதிகார துஷ்பிரயோகமும் செய்யும் அமைச்சர் இனியும் பதவியில் நீடிப்பது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது.
ஆகவே, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இனிமேலும் வேடிக்கைப் பார்க்காமல், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை உடனடியாக அமைச்சர் பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும்” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.