வருமான வரித்துறை அதிகாரிகள் மீது விஜயபாஸ்கர் கடும் குற்றச்சாட்டு. “என்னிடம் மிகவும் தரக்குறைவாக நடந்தனர்”
அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் இன்று காலையில் இருந்தே வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.
அப்போது விஜயபாஸ்கர் வீட்டில் இருந்தார். இந்த நிலையில் இன்று மதியம் 12.30 மணி அளவில் விஜயபாஸ்கரின் வீட்டு முன்பு அ.தி.மு.க.வினர் திரண்டு கோஷம் எழுப்பினார்கள். வருமான வரித்துறையின் நடவடிக்கையை அவர்கள் கண்டித்தனர்.
இந்த நிலையில் விஜயபாஸ்கர் தனது வீட்டில் இருந்து வெளியில் வந்து ஆதரவாளர்களை சமாதானப்படுத்தினார். அவர் தனது பெண் குழந்தையையும் அழைத்து வந்திருந்தார்.
பின்னர் வருமானவரி சோதனை குறித்து ஆவேசமாக பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
ஓ.பி.எஸ். அணியினரின் தூண்டுதலின் பேரில் தான் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று என் வீட்டில் சோதனை நடத்துகிறார்கள். பாதுகாப்பு படையினரும், வருமானவரித் துறை அதிகாரிகளும் என்னிடம் அத்துமீறி நடந்து கொண்டனர்.
என்றாலும் நான் வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தேன். அவர்கள் எனது வீட்டில் எல்லா இடத்திலும் சோதனை நடத்த அனுமதித்தேன்.
எனது வீட்டில் நடந்த சோதனை திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. இந்த சோதனையில் எதுவும் சிக்கவில்லை.
10 ஆயிரம் ரூபாயை கூட அதிகாரிகள் எனது வீட்டில் இருந்து எடுக்கவில்லை. நான் எந்த தவறும் செய்யவில்லை. நான் நிரபராதி. என்றாலும் வேண்டுமென்றே இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
எனது மகளை பள்ளிக்கு கூட அனுப்பி வைப்பதற்கு அவர்கள் அனுமதிக்கவில்லை. இது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு விஜயபாஸ்கர் கூறினார்.
இதையடுத்து வீட்டு வாசலில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த மத்திய பாதுகாப்பு படையினர் விஜயபாஸ்கரை உள்ளே செல்லுமாறு கூறினார்கள். இதனால் பரபரப்பு அதிகரித்தது. இதன்பின்னர் விஜய பாஸ்கர் தனது வீட்டிற்குள் சென்றார்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.