சுயநல அரசியலால் சட்டசபை தேர்தலில் விஜயகாந்த், அன்புமணி ஆகியோர் தோல்வி அடைந்தனர் -டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்.
பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் உள்ள கட்சியின் மாநில தலைமையகமான கமலாலயத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வாக்காளர்களை 100 சதவீதம் வாக்களிக்க செய்ய வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் முயற்சி வெற்றி பெறவில்லை. வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் ஆராய வேண்டும்.
நாங்கள் கேள்விப்பட்ட வரை, தேர்தலை திங்கட்கிழமை நடத்தி இருக்க கூடாது. ஏனென்றால், 3 நாட்கள் தொடர்ந்து விடுமுறை வந்தால் பலர் ஊருக்கு சென்றுவிட்டனர்.
சட்டமன்ற தேர்தல் எந்த அளவுக்கு நியாயமாக நடந்தது என்பது எல்லோருக்குமே தெரியும். ஓட்டுக்கு பணப்பட்டுவாடா எந்த அளவுக்கு நடந்தது என்பதை பார்த்தீர்கள். ஆனாலும், அதையும் மீறி தமிழகத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக பா.ஜனதா கட்சி உருவெடுத்துள்ளது. திராவிட கட்சிகளின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக பா.ஜனதா விளங்கியது. பல இடங்களில் 2-வது இடமும், 3-வது இடமும் பெற்றோம்.
சட்டமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில், பா.ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர்கள் கூட்டம் 23-ந் தேதி (நாளை) சென்னையில் நடைபெறவுள்ளது. 24-ந் தேதி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர்கள் கூட்டம் நடக்கிறது. மத்தியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பா.ஜனதா அரசு பொறுப்பேற்ற 3-ம் ஆண்டு தொடக்கம் வரும் 26-ந் தேதி வருகிறது. அன்றைய தினம் மத்திய மந்திரிகள் பலர் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க உள்ளனர்.
சென்னையில் மத்திய மந்திரி மனோகர் பாரிக்கர், சேலத்தில் மத்திய மந்திரி சதானந்த கவுடா, மதுரையில் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி, கோவையில் மத்திய மந்திரி உமா பாரதி, நாகர்கோவிலில் மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமன் உள்ளிட்டோர் கிராமம் கிராமமாக சென்று மக்களை சந்தித்து பா.ஜனதா அரசின் மக்கள் நலத்திட்டங்களை எடுத்துச் சொல்ல இருக்கின்றனர்.
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறிய மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும். டாஸ்மாக் கடைகள் படிப்படியாக அடைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. படிப்படியாக என்பதற்கு 5 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளாமல், 3 மாதத்திற்குள்ளேயே பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
‘நோட்டா’வுக்கு அதிக வாக்கு பதிவாகியுள்ளது. ஆனால், இது ஆரோக்கியமானது அல்ல. தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்கள், தங்கள் தொகுதியில் போட்டியிடுபவர்களில் சிறந்தவர் ஒருவரை தேர்ந்தெடுத்து வாக்களிக்க வேண்டும். நோட்டாவுக்கு ஓட்டுப்போடுவதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, நிருபர்கள் அவரிடம், ‘‘முதல்-அமைச்சர் வேட்பாளர்களாக அறிவித்துக்கொண்டு தேர்தலை சந்தித்த விஜயகாந்த், அன்புமணி ஆகியோர் தேர்தலில் தோல்வியடைந்து இருக்கிறார்களே?’’ என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அவர், ‘‘சுய நல அரசியலால் அன்புமணி, விஜயகாந்த் ஆகியோர் தோல்வியடைய வேண்டியதாகிவிட்டது. தான் முதல்-அமைச்சராக வேண்டும் என்று விரும்பியவர்கள் எம்.எல்.ஏ.வாக கூட வெற்றி பெற முடியவில்லை. ஆனால், பாராளுமன்ற தேர்தல் போன்று, இப்போதும் அவர்கள் பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்றிருந்தால், அதிக இடங்களில் வெற்றி பெற்றிருக்க முடியும்’’ என்றார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.