திருச்சியில் மக்கள் நலக் கூட்டணி மாநாடு; விஜயகாந்த் பேச்சு ஏமாற்றம்.
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க., மக்கள் நலக்கூட்டணி-த.மா.கா. சார்பில் ஒரு கூட்டணி அமைக்கப்பட்டு 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
கூட்டணியின் முதல்- அமைச்சர் வேட்பாளரும், தே.மு.தி.க. நிறுவன தலைவருமான விஜயகாந்த், ம.தி.மு.க. பொதுச்செயலாளரும், கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் தனித்தனியாக சூறாவளி பிரசாரம் செய்து வருகின்றனர்.
6 கட்சி தலைவர்களும் ஒன்றாக சேர்ந்து மாமண்டூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரசாரம் செய்து பேசினர். அதன்பின் ஒன்றாக இணைந்து ஒரே மேடையில் பிரசாரம் செய்யாமல் தனித்தனியாக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்து வந்தனர். இந்த நிலையில் 6 கட்சி தலைவர்களும் ஒரே மேடையில் பிரசாரம் செய்யும் வகையில் திருச்சியில் மாற்று அரசியல் வெற்றி கூட்டணி மாநாடு நடத்த அக்கூட்டணி கட்சி தலைவர்கள் முடிவு செய்தனர்.
இதற்காக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையோரம் பஞ்சப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டு 15 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் அமைக்கப்பட்டது. அதன்படி மாற்று அரசியல் வெற்றி கூட்டணி மாநாடு நேற்று மாலை நடந்தது. மாநாட்டு திடலில் 6 கட்சி தலைவர்களின் உருவப்படங்கள் அடங்கிய கட்-அவுட்கள், விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.
தலைவர்கள் பேசும் மேடையும் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருந்தன. தொண்டர்கள் அமருவதற்கு வசதியாக நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. மதியம் முதலே தொண்டர்கள் வரத்தொடங்கி மாநாட்டு திடலில் அமர்ந்தனர். மாநாடு நடைபெறும் இடத்தை சுற்றி மின் விளக்குகள் போடப்பட்டிருந்தன. தொண்டர்களின் வாகனங்களை நிறுத்த தனியாக வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தன. மாநாடு மாலை 6 மணிக்கு மேல் தொடங்கியது.
மாநாட்டில் திருச்சி தொகுதி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி கட்சி தலைவர்கள் பேசினர்.
மாநாட்டிற்கு விஜயகாந்த் தலைமை தாங்கி பேசினார். திருச்சி மாநகர் மாவட்ட த.மா.கா. தலைவர் சாருபாலா தொண்டைமான் முன்னிலை வகித்து பேசினார். அதன்பின் வைகோ, ஜி.கே.வாசன், ராமகிருஷ்ணன், தொல்.திருமாவளவன், முத்தரசன், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு ஆகியோர் பேசினர்.
மொத்தக் கூட்டமும் விஜயகாந்த் பேச்சுக்காக காத்திருக்க அவருக்கு முன்னர் பேச ஆரம்பித்த வைகோ இரவு ஒன்பதே முக்கால்வரை அவரே பேசிக்கொண்டிருந்தார்.(கூட்டம் 10 மணிக்கு முடிந்துவிடவேண்டும் என்பது தேர்தல் கமிஷனின் உத்தரவு) வெறும் பதினைந்து நிமிடம் இருக்கும்போதுதான் விஜயகாந்திற்கு மைக் தரப்பட்ட்டது. அதிலும் எழுதிக்கொடுத்திருப்பதைப் படிக்கப்போவதாக விஜயகாந்தே அறிவித்தார். எழுதப்பட்ட தாளில் இருந்தவற்றைச் சிரமப்பட்டு சில வரிகள் வாசித்தவர் மேற்கொண்டு இரண்டொரு வார்த்தைகள் பேசிவிட்டு வணக்கம் கூறி விடைபெற்றுக்கொண்டார்.
முன்னதாக திருச்சி மாநகர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் வெல்லமண்டி சோமு வரவேற்று பேசினார். முடிவில் மாநகர் மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் விஜயராஜன் நன்றி கூறினார். மாநாட்டில் 6 கட்சிகளை சேர்ந்த மாநில, மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.