சரியான நேரத்தில் முடிவு எடுக்கத்தெரியாத விஜயகாந்த் அரசியலில் பிரகாசிக்க முடியாது – பழ.கருப்பையா பேச்சு.
பம்மல் நகர தி.மு.க. சார்பில், சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும்பாடு என்பதை விளக்கி நேற்றிரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு பம்மல் நகரச் செயலாளர் வே. கருணாநிதி தலைமை தாங்கினார். இதில் சிறப்பு பேச்சாளர் பழ.கருப்பையா பேசியதாவது:-
அ.தி.மு.க.வில் நான் 10 ஆண்டாக இருந்தவன். அங்கு கருத்து சுதந்திரத்துக்கு மரியாதை கிடையாது. சட்டசபையில் ஆளும் கட்சி உறுப்பினராக நான் இருந்தபோது போலீஸ் மானிய கோரிக்கையில் பேசினேன். எனது பேச்சுக்கு முதல்-அமைச்சர் அப்போது 30 நிமிடம் பதில் கூறினார்.
எதிர்க்கட்சிக்கு தான் நீண்ட விளக்கம் அளித்து பேசுவது வழக்கம். அன்று முதல் நான் ஓரம் கட்டப்பட்டேன். பின்னர் அ.தி.மு.க.வில் இருந்து படிப்படியாக விலகும்படி ஆகிவிட்டது. எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்தேன். இது பழைய கதை.
சட்டமன்றத்தில் தி.மு.க. மக்கள் பிரச்சினைகளை முன் வைத்து பேசுகிறார்கள். ஆனால் ஆளும்கட்சி உறுப்பினர்கள் சம்பந்தம் இல்லாமல் எதிர்க்கட்சி தலைவர்களை கிண்டல் செய்து பேசுகிறார்கள்.
தண்ணி வண்டி, தள்ளு வண்டி என்று ஏளனமாக பேசியவருக்கு மந்திரி பதவி கிடைக்கிறது என்றால் நாடு எங்கே செல்கிறது. மற்றவர்களை சீண்டும் வகையில் பேசுவதுதான் ஜனநாயகமா?
கடந்த தேர்தலில் தி.மு.க.வுடன் விஜயகாந்த் கூட்டணி சேர்ந்திருந்தால் இப்போது பிரகாசமாகி இருப்பார். ஆனால் வைகோ போன்றவர்கள் விஜயகாந்தை ஒழித்து விட்டார்கள். இனிமேல் விஜயகாந்த் அரசியலில் பிரகாசிக்க முடியாது.
இவ்வாறு பழ.கருப்பையா பேசினார்.
கூட்டத்தில் காஞ்சி வடக்கு மாவட்டச் செயலாளர் தா. மோ.அன்பரசன் பேசியதாவது:-
தி.மு.க. ஆட்சியில் தலைவர் கலைஞரை சட்டசபையில் புகழ்ந்து பேசினால், பிடிக்காமல் அவர் திரும்பி பார்த்தால் உடனே பேச்சை நிறுத்தி விடுவார்கள்.
ஆனால் இப்போது சட்ட சபையில் முதல்-அமைச்சரை அ.தி.மு.க.வினர் புகழ்ந்து பாராட்டி பேசுகிறார்கள். அதை நாங்கள் பொறுமையாக கேட்டுக் கொண்டிருக்கிறோம். அந்த சமயத்தில் தலைவரைப்பற்றி, தளபதியை பற்றி விமர்சனம் செய்தால் எப்படி சும்மா இருக்க முடியும்?
அ.தி.மு.க.வினர் பேசும் போது குறுக்கீடு இருப்பதில்லை. ஆனால் நான் பேசினால் 7 அமைச்சர்கள் பதில் சொல்கிறார்கள். சட்ட சபையில் அ.தி.மு.க.வினரின் கிண்டல் பேச்சை எங்களால் தாங்கிக் கொள்ள முடிய வில்லை. சட்டசபை அ.தி.மு.க. வின் புகழ்பாடும் மன்றமாக ஆகி விட்டது.
இவ்வாறு தா.மோ. அன்பரசன் பேசினார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.