மக்கள் நலக்கூட்டணியிலிருந்து விலக விஜயகாந்த் முடிவு.
தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்ற தே.மு.தி.க. 104 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்த தேர்தலில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உள்பட 104 பேரும் தோல்வி அடைந்தனர்.
தேர்தல் தோல்விக்கு காரணம் என்ன என்பது பற்றி தேமு.தி.க. வேட்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களிடம் விஜயகாந்த் கருத்து கேட்டார். அப்போது மக்கள் நலக் கூட்டணியுடன் கூட்டணி அமைத்ததுதான் தேர்தல் தோல்விக்கு காரணம் என்று நிர்வாகிகள் பலரும் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த ம.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று பேசிய பொதுச்செயலாளர் வைகோ, தே.மு.தி.க. நிர்வாகிகளின் கருத்துக்களுக்கு பதில் அளிக்கும் வகையில் மக்கள் நலக் கூட்டணியில் இருந்து தே.மு.தி.க.வும், த.மா.கா.வும் விலகினால் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறியதாக செய்திகள் வெளியாயின. இதை ம.தி.மு.க. தரப்பில் மறுக்கவில்லை.
இதனால் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அதிருப்தி அடைந்ததாகவும் மக்கள் நலக் கூட்டணியில் இருந்து தே.மு.திக. விலக போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக தே.மு.தி.க. தலைமை கழக நிர்வாகி ஒருவர் கூறியதாவது-
சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க.வின் தோல்வி குறித்து ஆலோசனை நடத்திய போது மக்கள் நலக் கூட்டணியில் இருந்ததுதான் காரணம் என்று நிர்வாகிகள் பலரும் குறை கூறினார்கள். பூத் செலவுக்கு கூட பணம் கொடுக்காததால்தான் தோல்வி அடைந்தோம். சொத்துக்களை அடமானம் வைத்து போட்டியிட்டதால் இப்போது ஏதும் இல்லாமல் நிற்கிறோம் என்று சில வேட்பாளர்கள் கூறினார்கள்.
எனவே பூத் செலவுக்கு பணம் வாங்க வேட்பாளர்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க விஜயகாந்த் சம்மதித்தார்.
இதற்கிடையே சந்திரகுமார் தலைமையிலான மக்கள் தே.மு.தி.க.வினர் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டு தே.மு.தி.க.வில் இருந்து நிர்வாகிகளை இழுக்கும் வேலையில் இறங்கியுள்ளனர்.
எனவே நிர்வாகிகளையும், தொண்டர்களையும் திருப்தி செய்யும் வகையில் மக்கள் நலக் கூட்டணியில் இருந்து விலகுவதற்கான அறிவிப்பை விஜயகாந்த் வெளியிட உள்ளார். மேலும் கட்சியில் நிர்வாக ரீதியான மாற்றங்களையும் அவர் செய்ய உள்ளார். இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
-அமுதவன்
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.