விஜயகாந்த் இம்முறை உளுந்தூர்பேட்டையில் தோற்பது உறுதி –பாமக வேட்பாளர் பாலு சொல்கிறார்.
உளுந்தூர்பேட்டை தொகுதியில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. வேட்பாளரக குமரகுரு எம்.எல்.ஏ., தி.மு.க. வேட்பாளராக வசந்தவேல், பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளராக வக்கீல் பாலு ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
நட்சத்திர அந்தஸ்து பெற்ற இந்த தொகுதியில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் வக்கீல் பாலு “மாலைமலர்” நிருபரிடம் கூறியதாவது:-
2006 தேர்தலில் விருத்தாசலத்திலும், 2011 தேர்தலில் ரிஷிவந்தியம் தொகுதியிலும் போட்டியிட்டார். ஒவ்வொரு தேர்தலிலும் விஜயகாந்த் தொகுதி மாறி போட்டியிடுகிறார். அவருக்கு தோல்வி பயம் வந்து விட்டது. சினிமாவில் வேண்டுமென்றால் அவர் மாயை தோற்றத்தை உருவாக்கலாம். ஆனால் பொது வாழ்வில் அது எடுபடாது.
அவரது சொந்த ஊரான மதுரையிலும், அவர் தற்போது வசிக்கும் சென்னை மதுரவாயலிலும், பிரேமலதாவின் சொந்த ஊரிலும் அவரால் போட்டியிட முடியவில்லை.
சினிமா மோகத்தில் உளுந்தூர்பேட்டை மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கலாம் என்று நினைத்து உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடுகிறார். ஆனால் அவர் இந்த முறை வெற்றி பெற முடியாது. அவரது தோல்வி உறுதி. கடந்த 10 ஆண்டுகள் எம்.எல்.ஏ.வாக இருந்த விஜயகாந்த் சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக இருந்தார். மொத்தத்தில் 29 நாட்கள் மட்டுமே சட்ட சபைக்கு சென்றுள்ளார்.
ஆனால் ஒரு கேள்வி கூட கேட்க வில்லை. மொத்தத்தில் ஒரு மணி நேரம் 1 நிமிடம் மட்டுமே பேசியுள்ளார். இவர் ஏன் மீண்டும் தேர்தலில் போட்டியிட வேண்டும்?
நான் அடிப்படையிலே பொதுமக்களுக்காக ஏராளமான போராட்டங்களை நடத்தியுள்ளேன். தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 600-க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் அகற்றப்பட்டுள்ளன.
மருத்துவம், என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கான நுழைவு தேர்வுகளை ரத்து செய்ய வழக்கு தொடர்ந்து வெற்றி கண்டுள்ளேன். சமச்சீர் கல்வியையும் தமிழகத்தில் போராடி அமல்படுத்தியுள்ளேன். இதனால் எனது வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.