நான் அதிமுகவில் சேருவேன் என்ற செய்தி விஷமத்தனமானது; என்னைப் பிடிக்காதவர்கள் கிளப்பிவிட்ட வதந்தி அது – சொல்கிறார் விஜயதரணி.
தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் வெற்றி பெற்ற விஜயதரணி மேலும் சிலருடன் அ.தி.மு.க.வில் சேரப்போவதாக தகவல் வெளியானது. டெல்லி வந்த அவரிடம் இதுபற்றி கேட்டபோது, இது ஆதாரமற்றது, வெறும் புரளி என்றார்.
நடந்துமுடிந்த சட்டசபை தேர்தலில் விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜயதரணி நேற்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திக்க டெல்லி வந்தார். தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து மரியாதை நிமித்தமாக காங்கிரஸ் மேலிட தலைவர்களை சந்திக்க வந்திருப்பதாக அவர் கூறினார்.
இதற்கிடையே விஜயதரணி மேலும் சிலருடன் விரைவில் அ.தி.மு.க.வில் சேரப்போவதாக ‘வாட்ஸ்-அப்’, முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது தினத்தந்தி நிருபரிடம் அவர் கூறியதாவது:-
கடுமையான சூழலில் இந்த தேர்தலில் போட்டியிட்டு பொதுமக்களால் நான் பெற்ற வெற்றி மற்றும் அதனை தொடர்ந்து தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் பதவியை கட்சித் தலைமை எனக்கு வழங்கிவிடக்கூடாது என்ற எண்ணத்துடன் சிலர் எனக்கு எதிராக கிளப்பிவிடும் ஆதாரம் ஏதுமற்ற புரளி இது.
என்னுடைய தலைமைக்கு என்றும் நான் விசுவாசமாக இருந்திருக்கிறேன், இருப்பேன். கடந்த காலத்திலும் எனக்கு எதிராக பல்வேறு பிரச்சினைகளை சிலர் கிளப்பியபோதும் என்னுடைய தலைமை எனக்கு ஆதரவை நல்கியது. இதுபோன்ற அருமையான தலைமை மற்றும் தலைவர்களை விட்டு நான் விலகுவேன் என்பது கற்பனையிலும் நடக்காத காரியமாகும்.
இவ்வாறு விஜயதரணி கூறினார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.