294 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக 6 கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் முதலாவது கட்டமாக 18 தொகுதிகளுக்கு ஏப்ரல் 4–ந் தேதியும், 11–ந் தேதியும் ஓட்டுப்பதிவு நடந்தது.
2–வது கட்டமாக 56 தொகுதிகளுக்கு கடந்த 17–ந் தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. இரு கட்ட தேர்தல்களிலும் 70 சதவீதம் அளவுக்கு வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது.
3–வது கட்டமாக 62 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. வடக்கு கொல்கத்தாவில் 7 தொகுதிகளும், முர்சிதா பாத், நாடியா, பர்த்வான் மாவட்டங்களில் மீதம் உள்ள தொகுதிகளும் அடங்கியுள்ளன.
திரிணாமுல் காங்கிரஸ் மந்திரிகள் சசிபாஞ்சா சதன் பாண்டே, பா.ஜனதா தேசிய செலாளர் ராகுல் சின்கா 5 தடவை காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான சோரப் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. அனிசுர் ரகுமான், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி நஸ்ருல் இஸ்லாம் ஆகியோர் இன்றைய தேர்தலை சந்திக்கும் முக்கிய பிரபலங்கள் ஆவார்கள்.
62 தொகுதிகளிலும் வாக்குச் சாவடிகளில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. 75,000 மத்திய படை போலீசார் உள்பட மொத்தம் 1 லட்சம் போலீசார் குவிக்கப்பட்டனர். 3401 வாக்குச்சாவடிகள் பதட்டம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டு அங்கு பாதுகாப்பில் கூடுதல்கவனம் செலுத்தப்பட்டது.
ஓட்டுப்பதிவு தொடங்கிய காலை 7 மணிக்கெல்லாம் வாக்குச்சாவடிகளில் ஆண்களும், பெண்களும் வரிசையில் நின்று வாக்களித்தனர். இதனால் ஓட்டுப்பதிவு விறுவிறுப்புடன் தொடங்கியது. வாக்குபதிவு சுமூகமாக போய் கொண்டிருந்த நிலையில் முர்சிதா பாத் தொகுதியில் திடீர் என்று மோதல் ஏற்பட்டது.
அங்கு ஒரு வாக்குச்சாவடி முன் திரிணாமுல் காங்கிரஸ் ஏஜெண்டுகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஏஜெண்டுகளுக்கும் பயங்கர மோதல் ஏற்பட்டது.
அப்போது திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் வெடி குண்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தொண்டர் ஒருவர் பலியானார்.
இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. அந்த வாக்குச் சாவடியில் ஓட்டுப்போட வந்த வாக்காளர்கள் பயந்து நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டது. தகவல் கிடைத்ததும் அந்த வாக்குச் சாவடிக்கு கூடுதலாக பாதுகாப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவ இடத்துக்கு உயர் போலீஸ் அதிகாரிகள் விரைந்து சென்று அமைதி ஏற்படுத்தினார்கள்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.