அரசுக்கு எதிராக வாக்களித்ததாக ஓ.பன்னீர்செல்வம் – 11 எம்.எல்.ஏ.க்கள் மீது ஐகோர்ட்டில் வழக்கு
எடப்பாடி பழனிசாமி கடந்த பிப்ரவரி மாதம் முதல்-அமைச்சராக பதவி ஏற்றார்.
அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்த அப்போதைய கவர்னர் வித்யாசாகர்ராவ், 15 நாட்களுக்குள் சட்டசபையை கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதையடுத்து பிப்ரவரி மாதம் 18-ந்தேதி சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது சட்டசபை உறுப்பினர்களை டிவிசன் வாரியாக எழுந்து நிற்க செய்து வாக்கெடுப்பை சபாநாயகர் தனபால் நடத்தினார்.
அந்த சமயத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வமும் அவரது 11 எம்.எல்.ஏ.க்களும் வாக்களித்தனர். என்றாலும் எடப்பாடி பழனிசாமி மெஜாரிட்டிக்கான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவைப் பெற்று நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார்.
இதைத் தொடர்ந்து ஓ.பி.எஸ். மற்றும் 11 எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகரிடம் மனு கொடுக்கப்பட் டது. அதில் கட்சி உத்த வுக்கு கட்டுப்படாத ஓ.பி.எஸ். உள்ளிட்ட 12 எம்.எல்.ஏ.க்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
ஆனால் அவர்கள் மீது சபாநாயகர் உடனடி நடவடிக்கை எதையும் மேற்கொள்ளவில்லை. அ.தி.மு.க. அணிகள் இணைப்பு முயற்சி நடந்ததால் அந்த விவகாரத்தில் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் டி.டி.வி.தினகரனை ஆதரிக்கும் 18 எம்.எல்.ஏ.க்கள் கவர்னரை சந்தித்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கடிதம் கொடுத்ததால் அவர்கள் கட்சி விதியை மீறி விட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரன் அளித்த மனுவை ஏற்று 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் நடவடிக்கை எடுத்தார்.
இதை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் அந்த மனுக்கள் மீதான விசாரணை நடைபெறவில்லை.
இதற்கிடையே அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கும் விஷயத்தில் சபாநாயகர் பாரபட் சத்துடன் நடந்து கொள்வதாக கூறி தி.மு.க. கொறடா சக்கரபாணி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், “ஓ.பி.எஸ். உள்பட 12 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
அந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. அடுத்தக்கட்ட விசாரணை வரும் 27-ந் தேதி நடைபெற உள்ளது. சபாநாயகர் மற்றும் சட்டசபை செயலாளர் இருவரும் கொடுக்கும் பதிலைப் பொறுத்து இந்த விசாரணை தொடர உள்ளது.
இந்த நிலையில் ஓ.பி.எஸ். உள்பட 12 எம்.எல்.ஏ.க்கள் மீதான விவகாரத்தை டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் கையில் எடுத்துள்ளனர். ஓ.பி.எஸ்.சையும் 11 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்யக்கோரி இன்று (வெள்ளிக்கிழமை) அவர்கள் சென்னை ஐகோர்ட்டில் மனு செய்தனர்.
இது குறித்து தங்க தமிழ்ச் செல்வன் கூறியதாவது:-
சட்டசபையில் கடந்த பிப்ரவரி மாதம் 18-ந்தேதி எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பின்போது ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு எதிராக வாக்களித்திருந்தனர்.
இவர்கள் மீது பதவி நீக்கம் நடவடிக்கை எடுக்கும்படி கொறடா மற்றும் சபாநாயகரிடம் நாங்கள் ஏற்கனவே கடிதம் கொடுத்திருந்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் சபாநாயகர் எடுக்கவில்லை. இதுபற்றி விசாரணையும் நடத்தவில்லை.
ஆனால் இந்த அரசை பற்றி விமர்சித்து பேட்டி அளித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.
கொறடா உத்தரவை மீறி சட்டசபையில் அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 12 எம்.எல்.ஏ.க்களும் சட்டப்படி பதவியில் நீடிக்க தகுதி இல்லாதவர்கள். இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராகி விட்டார். அவர் பதவி ஏற்றது செல்லாது. அவரது எம்.எல்.ஏ. பதவி சட்டப்படி ஏற்புடையது அல்ல. எனவே எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்த 12 எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிக்க ஐகோர்ட்டில் இன்று அபிடவிட் தாக்கல் செய்து வழக்கு தொடர்கிறோம்.
என்னுடன் ரங்கசாமி, பார்த்தீபன், வெற்றிவேல் ஆகிய 4 பேரும் சேர்ந்து இந்த வழக்கை தொடர்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.