சபாநாயகர் நடவடிக்கைக்கு பயபடமாட்டோம்; மு.க.ஸ்டாலின் பேட்டி
சட்டசபையில் வெளிநடப்பு செய்தது ஏன் என்பது பற்றி எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-
நடந்து முடிந்த கவர்னர் உரையிலும் பட்ஜெட் மீதான விவாதத்திலும் தி.மு.க உறுப்பினர்கள் சட்டசபையில் எந்த அளவுக்கு ஜனநாயக முறையில் கடமையாற்றினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
ஆனால் எங்கள் உறுப்பினர்கள் பேசும் கருத்துக்களை பதிவு செய்ய விடாமல் திட்டமிட்டு செய்யப்படுகிறார்கள்.
சபாநாயகர் சர்வாதிகார அடிப்படையில் சபையை நடத்துகிறார். இது உள்ள படியே வேதனைஅளிக்கிறது. சபாநாயகருக்கு உரிய மதிப்பு கொடுத்து நாங்கள் செயல்பட்டோம். சபாநாயகராக அவர் தேர்வு செய்யப்பட்ட அன்றே அவரை இருக்கையில் அமர வைத்து நான் பேசும் போது, எங்களை எதிரி கட்சியாக பார்க்காமல் எதிர் கட்சியாக பாருங்கள். எங்களுக்கும் சம வாய்ப்பு கொடுங்கள் என்றுதான் பேசினேன்.
அதன்படி எங்கள் பணியை செவ்வனே செய்து வந்தோம். நேற்று துரை முருகன் சட்டம் ஒழுங்கு பிரச்சினை பற்றி பேசிய போது அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் சில விளக்கங்களை தந்தார்.
அப்போது அமைச்சர் ஓ.எஸ். மணியன் கோர்ட்டில் உள்ள ஒரு வழக்கு பற்றி பேசினார். அது அவை குறிப்பில் பதிந்துள்ளது. ஆனால் இதற்கு பதிலடியாக துரைமுருகன் மற்றொரு கோர்ட்டு வழக்கை எடுத்து சொன்னார். ஆனால் அதை அவை குறிப்பில் இருந்து சபாநாயகர் நீக்குகிறார்.
இதில் பெரிய பிரச்சனை ஏற்பட்டது. அமைச்சர் பேசியது அவை குறிப்பில் இருக்குமானால் துரை முருகன் பேசிய பேச்சும் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அமைச்சர் பேச்சையும் அவை குறிப்பில் இருந்து நீக்க சொன்னோம்.
இதேபோல்தான் அ.தி.மு.க உறுப்பினர்கள் ராஜன் செல்லப்பா, தென்னரசு ஆகியோர் என்னைப்பற்றியும் கலைஞரைப் பற்றியும் தேவையில்லாத கருத்துக்களை கூறியிருந்தார்கள். அதையும் நீக்க கேட்டிருந்தோம்.
அவை குறிப்பை படித்து பார்த்து தீர்ப்பு செல்வதாக சபாநாயகர் கூறினார். ஆனால் இதுவரை சொல்லவில்லை.
அதே போல்தான் இப்போதும் சொல்கிறார். சபாநாயகர் பொதுவானவராக இருக்க வேண்டும். ஆனால் அவர் ஒரு தலைபட்சமாக செயல்படுகிறார். அ.தி.மு.க பொதுக்குழு போல் சபையை நடத்துகிறார்.
சபாநாயகரை எதிர்க்கும் எண்ணம் தி.மு.க வுக்கு இல்லை. ஆனால் அவர் ஒரு சார்பாக நடப்பதால் எங்கள் நியாயத்தை வலியுறுத்துகிறோம்.
ஏற்காத பட்சத்தில் தான் வெளிநடப்பு செய்கிறோம். அதே போல் இன்று நிதி அமைச்சரின் பதில் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்துள்ளோம் என்றார்.
கேள்வி: சபையை நடத்த தி.மு.க குந்தகம் விளைவிப்பதாகவும் தொடர்ந்து இப்படி செயல்பட்டால் நடவடிக்கை எடுக்க போவதாக கூறி உள்ளாரே?
பதில்: சட்டசபையில் சர்வாதிகார போக்குக்கு துணையாக இருக்க மாட்டோம். எந்த நடவடிக்கை எடுத்தாலும் பயப்பட மாட்டோம். அப்படி நடவடிக்கை எடுத்தால் எங்கு தீர்வு காண முடியுமோ அங்கு முறையிடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.