மீத்தேன் திட்டத்துக்கு நாங்கள் அனுமதி தரவில்லை: சட்டப்பேரவையில் ஸ்டாலின் விளக்கம்
திமுக ஆட்சியில் மீத்தேன் திட்டத்துக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டுமே போடப்பட்டது. அனுமதி தரவில்லை என்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான 2-ம் நாள் விவாதம் இன்று நடந்தது. விவாதத்தை அதிமுக உறுப்பினர் வெற்றிவேல் தொடங்கி வைத்தார்.
அதிமுக உறுப்பினர் வெற்றிவேல் பேசுகையில், ”ஒருசில பத்திரிகைகளில் விவசாயிகள் எதிர்க்கட்சி தலைவரை சந்தித்தது போன்ற படம் வந்துள்ளது. உண்மையில் விவசாயிகளுக்கு துரோகம் செய்யக்கூடிய மீத்தேன் திட்டத்தை கொண்டு வந்தது திமுக ஆட்சி காலத்தில்தான்” என கூறினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் கூச்சலிட்டு அமளியில் ஈடுபட்டனர்.
அதற்குப் பிறகு பேசிய ஸ்டாலின், ”மீத்தேன் திட்டத்திற்கு கடந்த திமுக ஆட்சி காலத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டும் தான் போடப்பட்டதே தவிர அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை.அந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கூட விவசாயிகளிடம் கருத்து கேட்பு, தடையில்லா சான்று ஆகியவை பெற்ற பிறகு தான் அனுமதி அளிக்க வேண்டும் என அந்த ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளது. அதற்குள் ஆட்சி மாற்றம் நடந்து அதிமுக தான் அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். ஆகவே மீத்தேன் திட்டத்திற்கு திமுக எந்த அனுமதியும் தரவில்லை” என்றார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் மின்துறை அமைச்சர் தங்கமணி பேசுகையில், ”கடந்த 4.11.2011 அன்று அந்த ஒப்பந்தத்தில் விவசாயிகளுக்கு எதிரான பல்வேறு கருத்துக்கள் இடம் பெற்றிருந்த காரணத்தினால் தான் அந்த திட்டத்தை நாங்கள் கைவிட்டோம்” என்றார்.
ஸ்டாலின் மீண்டும் பேசுகையில், ”அமைச்சர் விளக்கத்தை ஏற்றுக்கொள்கிறேன். திமுக ஆட்சிக் காலத்தில் ஒப்பந்தம் மட்டும் தான் போடப்பட்டதே தவிர அனுமதி தரவில்லை என்பதை மீண்டும் பதிவு செய்ய விரும்புகிறேன்” என்றார்.
இதற்கு தங்கமணி குறுக்கிட்டு பேசுகையில், ”புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பாக அரசாணை வெளியிட்டது என்ன அர்த்தம் என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு ஸ்டாலின் , ”அரசாணை வெளியிட்டதாலே அதற்கு அனுமதி அளித்ததாக அர்த்தமில்லை” என தெரிவித்தார்.
பேரவை நிகழ்ச்சிகள் முடியும் தருவாயில், அமைச்சர் தங்கமணி, ”மீத்தேன் வாயு திட்டம் தொடர்பாக, புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டதாக எதிர்க்கட்சி தலைவர் பேசினார். ஆனால் 1.1.2011 மீத்தேன் வாயு திட்டம் தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது” என்றார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.