எங்களுக்குப் பாராட்டுக்கள் வேண்டாம். கூடுதலாகப் பணியாற்றியதற்கு ஓவர்டைம் பணம் கொடுங்கள் – வங்கி ஊழியர்கள் கோரிக்கை.
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் 8-ம் தேதி அதிரடியாக அறிவித்தார். அதற்கு பதிலாக புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து நாட்டில் பணப்புழக்கம் கடுமையாக பாதிக்கப்பட்டது. வங்கிகளில் இருந்து பணம் எடுப்பதற்கு அதிக அளவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
அறிவிப்பு வெளியானது முதல் கடந்த 50 நாட்களுக்கு மேலாக நாடு முழுவதும் உள்ள வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்-களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
வங்கிகளில் கூட்டம் அலைமோதியதால் ஊழியர்கள் தங்களது பணி நேரத்திற்கும் மேலாக பல மணி நேரம் கணக்கில்லாமல் வேலை செய்தனர். பணிச் சுமை காரணமாக சில வங்கி அதிகாரிகள் உயிரிழந்த சம்பவமும் இந்த நாட்களில் நிகழ்ந்தது.
இந்நிலையில், ரூபாய் நோட்டு ரத்து நடவடிக்கை அமலில் இருந்த 50 நாட்களில் கூடுதலாக பணியாற்றிய நேரத்திற்கு சம்பளம் வழங்க வேண்டும் என்று வங்கி ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து பாரதிய மஸ்தூர் சங்கத்தின் துணை அமைப்பான தேசிய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 50 நாட்களில் வங்கி ஊழியர்கள் 12-18 மணி நேரம் பணி புரிந்தனர். ஆனால், சில வங்கிகள் மட்டும் தான் கூடுதலாக பணியாற்றிய நேரத்தில் ஓவர் டைமாக ஏற்றுக் கொண்டது. வேலை நேரத்தை தாண்டி கூடுதலாக பணியாற்றியதை ஓவர் டைமாக வங்கி நிர்வாகங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ரூபாய் நோட்டு ரத்து நடவடிக்கையின் போது வங்கி ஊழியர்கள் கடுமையாக பணியாற்றியதாக பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்த அடுத்த நாளிலே இத்தகைய கோரிக்கை எழுந்துள்ளது.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.