நடிகர்சங்க நிலத்தை மீட்டுவிட்டோம் – கார்த்தி மற்றும் பொன்வண்ணன் அறிவிப்பு!
தென்னிந்திய நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் பொன்வண்ணன் ஆகியோர் சென்னை தியாகராயநகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் திங்கள்கிழமை செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:-
நடிகர் சங்க அறக்கட்டளை மூலம் 2010ல் நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக, எஸ்.பி.ஐ. சினிமாஸ் என்ற தனியார் நிறுவனத்துடன் கடந்த நிர்வாகத்தால் ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த ஒப்பந்தம் 9 பேர் கொண்ட அறக்கட்டளையின் நிர்வாகத்தில் 2 பேர் மட்டுமே கொண்டு போடப்பட்டதால் அது அறக்கட்டளை சட்டப்படி தவறானது என சங்க உறுப்பினர் பூச்சி முருகன் வழக்கு தொடர்ந்தார்.
நடிகர்களும் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி பல முறை கோரிக்கைவைத்தோம். அது நிறைவேறாததால் தேர்தலில் நின்றோம். வெற்றியும் பெற்றோம். நாங்கள் தேர்தல் அறிக்கையில் சொல்லியிருந்தபடி பதவிக்கு வந்தவுடன், அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய, தனியார் நிறுவனத்துடன் பல முறை பேச்சுவார்த்தை நடத்தினோம். அதிலுள்ள சட்ட சிக்கல்களை விவாதித்தோம்.
முடிவில் அந்த ஒப்பந்தத்திற்காக கொடுக்கப்பட்ட ரூ.48 லட்சம் மற்றும் பத்திரப்பதிவுக்காக கொடுக்கப்பட்ட ரூ.1 கோடியே 41 லட்சம், கடந்த 2 வருடங்களாக நடிகர் சங்க அலுவலுக்கு மாதாந்திர செலவுகளுக்கு கொடுக்கப்பட்ட ரூ.59 லட்சத்தையும் சேர்த்து 2 கோடியே 48 லட்ச ரூபாயை அந்த நிறுவனத்துக்கு திருப்பி கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி அந்த தொகையை கொடுத்து இன்று (நேற்று) ஒப்பந்தத்தை ரத்து செய்து நிலம் மீட்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
முதலீடு செய்த பணத்திற்கான வட்டியை ரத்து செய்து எதிர்காலத்தில் நடிகர் சங்கத்துடன் என்றும் ஒத்துழைப்போம் என்று கூறிய எஸ்.பி.ஐ. சினிமாவிற்கும், ரூ.2 கோடி கொடுத்தால்தான் ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியும் என்ற சூழ்நிலையில் குறுகிய காலத்தில் ரூ.2 கோடியை பெற்று தந்த சங்க அறக்கட்டளை அறங்காவலர் ஐசரிகணேசுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். விரைவில் நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமானப்பணிகள் தொடங்கப்படும். இவ்வாறு கூறினார்கள்.
-ரயன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.