‘இந்தியாவுக்குள்ளிருந்து சுதந்திரம் வேண்டும்; இந்தியாவில் இருந்து அல்ல’- ஜேஎன்யூ மாணவர் சங்கத் தலைவர் கண்ணய்யா குமார் பேச்சு.
“இந்திய தேசத்துக்குள் சுதந்திரம் வேண்டும் என்பதுதான் மாணவ சமுதாயத்தின் எதிர்பார்ப்பே தவிர, இந்தியாவில் இருந்து சுதந்திரம் வேண்டும் என்பதல்ல” என ஜேஎன்யூ மாணவர் சங்கத் தலைவர் கண்ணய்யா குமார் சிறையில் இருந்து விடுதலையானவுடன் கூறினார்.
டெல்லி திஹார் சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட ஜே.என்.யூ. பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கண்ணய்யாவை வரவேற்க பல்கலைக்கழகத்தில் திரண்டிருந்த மாணவர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார். கடந்த மாதம் 13-ம் தேதி கண்ணய்யா குமார் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்படுவதற்கு முன்னர் அவர் எந்த இடத்தில் இருந்து பேசினாரோ அதே இடத்திலிருந்தே வியாழக்கிழமையும் உரையாற்றினார்.
“இந்நாட்டின் மாணவர்கள் எதிர்பார்ப்பது, இந்திய தேசத்தில் நிலவும் ஊழல் நடைமுறைகளில் இருந்து சுதந்திரமே தவிர இந்தியாவில் இருந்தே சுதந்திரம் அல்ல.
முதலாளித்துவம், பார்ப்பனீயம், சாதியத்திலிருந்து சுதந்திரம் தேவை. இந்தத் தேசத்தை சூறையாட முயல்பவர்களிடமிருந்து சுதந்திரம் தேவை. இதுதான் எங்கள் சுதந்திர வேட்கை என்பதை இந்தத் தேசத்துக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் சிறையிலிருந்தபோது, என்னை மருத்துவ பரிசோதனைக்கு, உணவுக் கூடங்களுக்கும் அழைத்து சென்ற காவலர்களிடம் என் சுதந்திர தாகம் குறித்து விளக்கினேன். ஊழல் சூழ்ந்த அமைப்புகளிலிருந்து விடுதலை பெறுவதே என் இலக்கு என்றேன். அவர்கள் என்னை புரிந்துகொண்டனர்.
ஜே.என்.யூ. மாணவர்கள் ஏன் குறிவைக்கப்பட்டனர்? ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலைக்கு நீதி கேட்டதற்காகவும், பல்கலைக்கழக மானிய குழு போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதற்காகவுமே, ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் ஆளும் பாஜக அரசால் குறிவைக்கப்பட்டனர்.
இந்தப் போராட்டம் ரோஹித் வெமுலாவால் துவக்கிவைக்கப்பட்டுள்ளது. நல்ல தீர்வு கிட்டும் வரை இப்போராட்டம் தொடரும். இது நீண்டதொரு போராட்டம். யாருக்கும் தலைவணங்காமல் இந்தப் போராட்டம் தொடரும்.
சத்யமேவ ஜெயதே என பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிடுகிறார். நானும் அதே வார்த்தைகளைத்தான் உச்சரிக்கிறேன். ‘சத்யமேவ ஜெயதே’ மோடிக்கு மட்டுமே சொந்தமான வாக்கியம் அல்ல.
ஏபிவிபி அமைப்பினர் எங்களுக்கு எதிரிகள் அல்ல; எங்களை எதிர்ப்பவர்கள் மட்டுமே.
நான் என் கிராமத்தில் மந்திர தந்திர நிகழ்ச்சிகளைப் பார்த்திருக்கிறேன். அந்த நிகழ்ச்சிகளில் எண்ணங்களை நனவாக்கும் மாய மந்திர வளையம் எனக் கூறி சில பொருட்களை விற்பனை செய்வர். அவர்களைப் போல் சிலர் நம் தேசத்தில் இருக்கின்றனர். கருப்புப் பணத்தை மீட்டெடுப்போம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என வார்த்தை ஜாலத்தை சிலர் பயன்படுத்திவருகின்றனர்.
தேர்தல் வாக்குறுதிகளை பொதுவாக நாம் அனைவரும் விரைவில் மறந்துவிடுவோம். ஆனால், இம்முறை அவர்கள் அளித்த வெற்று வாக்குறுதிகள் இன்னும் ஏனோ நம் நினைவில் நின்று கொண்டிருக்கிறது. இந்த அரசுக்கு எதிராக யாராவது குரல் எழுப்பினால், உடனே சைபர் குற்ற தடுப்புப் பிரிவு சித்தரிக்கப்பட்ட வீடியோக்களை உருவாக்கும், உங்கள் விடுதி அறையில் இருக்கும் ஆணுறைகள் எத்தனை என்பதை கணக்கெடுக்கும்.
அரசியல் சாசனம், சோஷலிசம், சமத்துவம், சகிப்புத்தன்மை இவை அனைத்துக்கும் ஜேஎன்யூ மாணவர்கள் குரல் கொடுக்கின்றனர். ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை எளிதல்ல என்பது எவ்வளவு உண்மையோ அதேபோல் ஜேஎன்யூ மாணவர்கள் மவுனியாக இருக்கமாட்டார்கள் என்பதும் உண்மை.
எங்கள் போராட்டங்களை இந்த அரசால் மழுங்கடிக்க முடியாது. இந்த நாட்டில் அனைவருக்கும் சமமான வளம் கிடைக்கும் வரை எங்கள் போராட்டம் ஓயாது. ஒரு ரோஹித் வெமுலாவின் வாயை மூட நீங்கள் எத்தனித்தீர்கள்… இன்று எத்தனை குரல் ஓங்கி ஒலிக்கிறது என்பதை கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.
என் குடும்பத்தின் வருமானம் ரூ.3000 என்று நான் யாரிடமும் சொல்லவில்லை. ஆராய்ச்சி மாணவன் யாரும் இப்படி சொல்லிக் கொள்ள மாட்டான். ஆனால், அவதூறுகள் பரப்பப்படுகின்றன. நியாயமான போராட்டங்களுக்காக குரல் கொடுத்தால் தேச விரோதி என அழைக்கிறார்கள். இது என்ன மாதிரியான தேசம்?” இவ்வாறு கண்ணையா குமார் உரையாற்றினார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.