Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

We will take a pledge to form DMK Govt in the 50th year of Dravidian rule- M.K.Stalin.

By   /  March 7, 2017  /  Comments Off on We will take a pledge to form DMK Govt in the 50th year of Dravidian rule- M.K.Stalin.

    Print       Email

திராவிட ஆட்சியின் 50-வது ஆண்டில் திமுக அரசை அமைத்திட உறுதியேற்போம்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்stalin-dmk-121-600-16-1481865934

திராவிட ஆட்சியின் 50-வது ஆண்டில், மீண்டும் திமுக அரசை அமைத்திட உறுதியேற்போம் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

InCorpTaxAct
Suvidha

இது தொடர்பாக திங்கள்கிழமை திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், ”கற்பனை செய்துகூட பார்க்க முடியாத அளவில் தான் ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக திராவிட இனத்தின் சமுதாய அந்தஸ்தும், கல்வி-வேலை வாய்ப்புகளும் பாதகமான நிலையில் இருந்து வந்தன.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நிலவி வந்த இழிநிலையைப் போராடித் தகர்த்த பெருமை நீதிக்கட்சி வழிவந்த திராவிட இயக்கத்திற்கு உண்டு. பெரியார் எனும் பகுத்தறிவு பூகம்பத்தால் பழமையும் அடிமைத்தனமும் நொறுங்கி வீழ்ந்து, புத்துலகம் நோக்கிய சிந்தனைகளுடன் செயல்படத் தொடங்கினர் திராவிட இன மக்கள். அந்த சிந்தனைகளுக்கு செயல்வடிவம் கொடுப்பதற்கு அரசியல் அதிகாரம் தேவை என்பதை உணர்ந்த அண்ணா திமுகவை உருவாக்கினார்.

கரடுமுரடான பாதை, அதில் கடுமையானப் பயணம், எதிர்ப்புகளுக்கு அஞ்சாத மனதிடம், எதிரிகளையும் இணங்கவைக்கும் குணநலம் கொண்டவர் நம் அண்ணா. அவர் தனது தம்பிமார்களுடன் லட்சியப் பயணத்தை மேற்கொண்டார். டெல்லிப் பட்டணம் வரை திராவிடத்தின் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்தார். தமிழினத்தின் தனித்தன்மையை இந்தியத் துணைக்கண்டம் உணரும் வகையில் நாடாளுமன்றத்தில் முழங்கினார்.

இயக்கத்தைத் தொடங்கிய 18 ஆண்டுகாலத்தில் எதிர்க்கட்சி என்ற நிலையிலேயே அரசியல்-சமுதாயத் தளத்தில் அண்ணாவும் அவரது தம்பிகளான நம் தலைவர் கருணாநிதி உள்ளிட்டோரும் ஏற்படுத்திய மாற்றங்களும் மறுமலர்ச்சிகளும் இதுவரை எந்த இயக்கமும் சாதித்திராத பெருமைக்குரியவை.

1967-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் திமுக மகத்தான வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. 6-3-1967 அன்று தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றார் அண்ணா. அவருடன் நாவலர், தலைவர் கருணாநிதி, கே.ஏ.மதியழகன், பண்பாளர் சாதிக் , பாவலர் முத்துசாமி, அம்மையார் சத்தியவாணிமுத்து , மாதவன், ஏ.கோவிந்தசாமி ஆகியோர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்ற திருநாள் இது.

அரை நூற்றாண்டுகளுக்கு முன்பு அண்ணா படைத்த மகத்தான இந்த சாதனை, இந்தியத் துணைக்கண்டத்திற்கே இன்றுவரை அரசியல் வழிகாட்டியாக உள்ளது. திராவிட இனத்தின் மாண்பு காக்கும் வகையில், சுயமரியாதை திருமணச் சட்டத்திருத்தத்தை நிறைவேற்றி அதனை பெரியாருக்கு காணிக்கை என முழங்கியவர் நம் அண்ணா.

அதுபோல, ஆதிக்கம் செலுத்த நினைத்த இந்தி மொழிக்கு இடமில்லை எனத் தடுத்து, தாய்மொழியைக் காக்கும் வகையில் இருமொழிக் கொள்கையை நிலைநாட்டினார். பெருமைமிக்க தமிழினத்தின் அடையாளத்தைக் குறிக்கும் வகையில், நமது மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டியவர் அவர். தாய்க்குப் பெயர் சூட்டி மகிழ்ந்த தனயன் என்ற சிறப்புப் பெருமையும் அண்ணாவுக்கே உரியது.

இனத்தின் பெருமையை மீட்டெடுத்த அந்தத் தலைமகனை இயற்கை நம்மிடமிருந்து 1969-ம் ஆண்டு பறித்துக் கொண்ட பிறகு, இயக்கத்தையும் ஆட்சியையும் தன் தோளில் சுமந்து திராவிட இயக்க இலட்சியப் பயணத்தை இன்றளவும் தொடர்ந்து வருபவர் நம் தலைவர் கருணாநிதி. பெரியாரின் மாணவனாக, அண்ணாவின் தம்பியாக இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் திராவிட இயக்கக் கொள்கைகளை நிலைநாட்டிய பெருமைக்குரியவர் நம் தலைவர் கருணாந்தி.

சமூக நீதித் தளத்தில் 69% இடஒதுக்கீட்டினை வழங்கி, மிக பிற்படுத்தப்பட்டோர்- இஸ்லாமியர்-அருந்ததியர் என அனைத்துத் தரப்பினரும் அதன் உண்மையானப் பலனைப் பெறச் செய்தவர். தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவுக்கே சமூக நீதிக் கொள்கையை பிரதமர் வி.பி.சிங் ஆட்சிக்காலத்தில் மண்டல் கமிஷன் அமலாக்கத்தின் மூலம் கொண்டுவர துணை நின்றவர் தலைவர் கருணாநிதி. இந்தியாவில் இன்று எந்த ஒரு தேசிய கட்சியும்-மாநிலக்கட்சியும் சமூக நீதிக் கொள்கையைப் புறக்கணித்துவிட முடியாது என்ற நிலையை ஏற்படுத்திய மகத்தானத் தலைவராக கருணாநிதி விளங்குகிறார்.

பெண்களுக்கான சொத்துரிமை, சிறுபான்மையினர் நலன், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் உரிமை, திருநங்கையர்-மாற்றுத்திறனாளிகள் என சமூகத்தால் ஒடுக்கப்பட்ட அனைத்துத் தரப்பு மக்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் திட்டங்களை வகுத்து செயல்படுத்தியவர் தலைவர் கருணாநிதிதான்.

விவசாயிகள்-நெசவாளர்கள்-தொழிலாளர்கள் ஆகியோரின் நலவாழ்வுக்கான திட்டங்கள், தொழுநோயாளர்கள்-பார்வையற்றோர்-பிச்சைக்காரர்கள் ஆகியோரின் மறுவாழ்வுக்கானத் திட்டங்கள், கல்வி-மருத்துவம்-மின்சாரம்-குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகள், தொழில்-போக்குவரத்து-சாலைகள்-பாலங்கள்-உள்ளாட்சி நிர்வாகம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் என அரசியல்-சமூக-பொருளாதார முன்னேற்றங்களில் இந்தியாவுக்கே முன்னோடியாகத் தமிழகம் திகழ்வதற்குக் காரணம், அண்ணா அடித்தளமிட்ட திராவிட இயக்க ஆட்சியும், அதன் தொடர்ச்சியாகத் தலைவர் கருணாநிதி மேற்கொண்ட திட்டங்களுமேயாகும்.

அண்ணாவின் பெயரைப் பயன்படுத்தி கட்சியை உருவாக்கி ஆட்சி நடத்தியவர்களும் உண்டு. அந்த போலித் திராவிடத்தால் ஏற்பட்ட பின்னடைவுகளும் நிறைய உண்டு. எனினும், அவர்களாலும் கூட திமுக அரசு கொண்டு வந்த மக்கள் நலத் திட்டங்களையும் சமூக மாற்றங்களையும் புறக்கணிக்க முடியவில்லை.

இன்றைக்கு இந்தியாவின் வடமுனையில் உள்ள ஜம்மு-காஷ்மீரில் தொடங்கி நமது அண்டை மாநிலங்களான ஆந்திரா-தெலங்கானா வரை பல மாநிலங்களிலும் தேசியக் கட்சிகளின் ஆதிக்கம் தகர்ந்து, மாநிலக் கட்சிகளின் ஆட்சி நடைபெறுவதைக் காண்கிறோம். அரை நூற்றாண்டுக்கு முன்பே இதற்கானப் பாதையை வகுத்து, வெற்றி பெற்றவர் நம் அண்ணா.

அணையா விளக்கு என்பது அண்ணாவின் நினைவிடத்தில் மட்டுமல்ல, திராவிட இயக்கத்தின் லட்சியங்களை ஏந்தியுள்ள நம் ஒவ்வொருவர் நெஞ்சிலும் சுடர்விட்டுக் கொண்டிருக்கிறது. மத்தியில் கூட்டாட்சி-மாநிலத்தில் சுயாட்சி என்ற உயர்ந்த நோக்கத்துடனான நம் லட்சியப் பயணத்தின் இலக்கை அடையும் வரை ஓய்வில்லை.

இடையிடையே திராவிடத்தையும் அண்ணாவையும் போலியாகப் பயன்படுத்துவோரும், திராவிட இயக்கம் அழிந்துவிட்டதாக மனப்பால் குடிப்போரும் களைகளாக முளைத்துக் கொண்டே தான் இருப்பார்கள். அந்தக் களைகளை அகற்றி, திராவிட நிலத்தில் தமிழ்ப் பயிர் செழிக்கச் செய்ய, அண்ணா உருவாக்கிய திமுகவால்தான் முடியும்.

அண்ணா உருவாக்கிய திராவிட ஆட்சியின் 50-ம் ஆண்டில், மீண்டும் திமுக அரசை அமைத்திட உறுதியேற்று, அண்ணா வழியில் அயராது உழைத்து ஆதிக்கமற்ற சமுதாயம் அமைக்க ஜனநாயக நெறியில் நமது பயணத்தைத் தொடர்வோம். விழிப்புடன் செயலாற்றி விரைவில் வெற்றி காண்போம்” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →