ரெயில் கொள்ளை நடந்தது எங்கே?: சென்னை சேத்துப்பட்டு பணிமனையில் முக்கிய தடயம் சிக்கியது
ரெயில் பெட்டியில் வங்கி பணம் கொள்ளை சம்பவத்தில் கொள்ளையர்கள் யார்? கொள்ளை சம்பவம் நடந்தது எங்கே? என்பதில் தொடர்ந்து மர்மம் நீடித்து வருகிறது. சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இந்த வழக்கில் தன்னுடைய கவனத்தை தீவிரமாக செலுத்தி வருகிறது.
இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி.யின் விசாரணைக்கு உதவியாக ரெயில்வே பாதுகாப்பு படையும் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக ஆதாரங்களை திரட்டி வருகிறது. அந்தவகையில், நேற்று ரெயில்வே பாதுகாப்பு படை ஐ.ஜி. பாரி தலைமையில் போலீஸ் உயர் அதிகாரிகள் குழுவினர் சேத்துப்பட்டு பணிமனை பகுதியில் தீவிர ஆய்வில் இறங்கினர்.
பத்திரிகையாளர்களுக்கு கூட இந்த சம்பவம் தெரிந்துவிடக்கூடாது என்பதில் ரெயில்வே பாதுகாப்பு படை மிகவும் கவனத்துடன் இந்த ஆய்வை மேற்கொண்டனர். ஆய்வின் போது கொள்ளை சம்பவத்தில் மிகவும் முக்கியமாக கருதப்படும் தடயம் ஒன்றை ரெயில்வே பாதுகாப்பு படையினர் கைப்பற்றியதாக நேற்று இரவு புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அப்படி எந்த பொருளை அவர்கள் முக்கிய தடயமாக தேடினார்கள் என்று ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-
ரெயில் பெட்டியின் மேற்கூரையானது 3 அடுக்குகளாக இருக்கும். முதல் மற்றும் 3-வது அடுக்கு இரும்பு தகடுகளை கொண்டது. இடையே உள்ள 2-வது அடுக்கு வெப்பத்தை கடத்தாத வகையில் பஞ்சு போன்ற பொருளால் ஆனது.
கொள்ளையர்கள் மேற்கூரையை துளையிட்டு 2-வது அடுக்கில் இருந்த இந்த பஞ்சு போன்ற பொருளை எடுத்த பிறகு தான், 3-வது அடுக்கில் இருக்கும் தகடை வெட்ட முடியும். இதில் மேற்கூரை தகடும், 3-வது அடுக்கில் இருக்கும் தகடும் இருக்கிறது. ஆனால் நடுவில் இருந்த பஞ்சு போன்ற பொருள் இல்லை. அதை தான் நாங்கள் முக்கிய தடயமாக தேடி வந்தோம்.
அதை நாங்கள் சேத்துப்பட்டு பணிமனை பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது கண்டெடுத்தோம். ஆனால் அது பணம் கொள்ளை அடிக்கப்பட்ட பெட்டியில் உள்ளது தானா? என்பது குறித்து இன்னும் தெரியவில்லை. அது தெரிய வந்தால் சேத்துப்பட்டு பணிமனையில் தான் பணம் கொள்ளை அடிக்கப்பட்டதா? என்பது உறுதியாக தெரியவரும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.