ஒயிட்ஃபீல்டில் சிறுத்தைகள் நடமாட்டம் ; மக்களும் போலீசாரும் பரிதவிப்பு.
ஒயிட்ஃபீல்ட் அருகேயுள்ள ஒரு தனியார் பள்ளிக்கு சென்ற ஞாயிறன்று சிறுத்தையொன்று வந்து சென்றதிலிருந்து அந்தப் பகுதியில் உள்ளவர்களும் அருகேயுள்ள நெல்லூரள்ளி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்களும் சிறுத்தைகளின் நடமாட்டம் காரணமாக பயத்தில் தவித்து வருகின்றனர். இது சம்பந்தமாய் நிருபர்களைச் சந்தித்த காட்டிலகா அதிகாரிகள் “அந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்து இன்றுவரை எங்களுக்கு எண்ணற்ற போன்கால்கள் வந்தவண்ணம் உள்ளன. நாங்களும் ஒரு போன்காலையும் புறக்கணிக்காமல் அவ்வளவு தொலைபேசிகளுக்கும் உரிய கவனம் செலுத்தி அவர்கள் சொல்லுகின்ற இடங்களுக்கெல்லாம் சென்று பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் இதுவரை ஒரு சிறுத்தையைக்கூட எங்களால் கண்டுபிடிக்கமுடியவில்லை” என்கின்றனர்.
ஆனால் தாங்கள் அருகிலுள்ள மரத்தின் மீது இரண்டு சிறுத்தைகள் இருந்ததைப் பார்த்ததாகவும், அருகிலுள்ள புதர் அருகே ஒற்றைச் சிறுத்தையைப் பார்த்ததாகவும் மக்கள் கொடுக்கின்ற தகவல்களால் அந்த வட்டாரமே பீதியடைந்து கிடக்கிறது. ஒரு மரக்கிளையில் சிறுத்தையொன்று படுத்துக்கிடப்பதைப் போல் அந்தப் பகுதி முழுவதும் வாட்ஸ்அப் மூலம் பரவிய போட்டோவினால் மக்களுக்கிடையே பீதி அதிகமானது. ஆனால் அது தென்னாப்பிரிக்க காடு ஒன்றில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும் யாரோ ஒரு விஷமி வேண்டுமென்றே அதனை வாட்ஸ் அப்பில் பரப்பியதாகவும் சொல்லி அந்தச் செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
போலீசாரும் காட்டிலாகாவினரும் சிறுத்தைகள் நடமாட்டம் அறவே இல்லை என்று சொல்லிவந்தாலும் மக்களின் கூற்றைப் புறக்கணிக்க முடியாவண்ணம் அருகிலுள்ள நீலகிரித் தைல மரக்காட்டில் சிறுத்தைகள் நடமாட்டத்துக்கான கால் தடயங்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். இதற்கிடையில் அந்த மொத்த வட்டாரத்தைச் சேர்ந்த 140க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு கல்வி இலாகா விடுமுறையை அறிவித்திருக்கிறது. சிறுத்தைப் பற்றிய பிரச்சினைகள் தீரும்வரைக்கும் இந்த விடுமுறை தொடரும் என்றும் அறிவித்திருக்கின்றனர் அதிகாரிகள்.
காட்டிலாகாவைச் சேர்ந்தவர்களும் போலீசாரும் வாகனங்களில் ரோந்து வந்த வண்ணம் உள்ளனர். அங்கங்கே கேமராக்கள் வைக்கப்பட்டிருப்பதுடன் சிறுத்தைகளைப் பிடிப்பதற்கான கூண்டுகளும் அமைக்கப்பட்டு அந்த ஏரியா முழுமைக்கும் கண்காணிக்கப்படுகிறது.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.