விமானக் கடத்தலின்போது யார் கொல்லப்பட்டாலும் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை; பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்.
1982-ம் ஆண்டு இயற்றப்பட்ட விமான கடத்தல் தடுப்பு சட்டத்தின்படி விமானத்தை கடத்திச் செல்லும் கடத்தல்காரர்கள் அல்லது தீவிரவாதிகள் பணயக் கைதிகளாக பிடிக்கப்படும் விமான பயணிகள், விமான ஊழியர்கள், விமான பாதுகாப்பு படையினர் ஆகியோரை கொன்றால் மட்டுமே அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும். இதில், விமான நிலைய ஊழியர்களுக்கு நேரும் உயிர் இழப்புகளுக்கான கடும் தண்டனை பற்றி கூறப்படாமல் இருந்தது.
இதற்கிடையே, உலகின் பல்வேறு விமான கடத்தல் சம்பவங்களில் பணயக் கைதிகளுடன், விமான நிலைய ஊழியர்களும் கடத்தல்காரர்களால் கொல்லப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து 1982-ம் ஆண்டு இயற்றிய சட்டத்தில் பல்வேறு திருத்தங்களைச் செய்து புதிய சட்டம் இயற்றவேண்டும் என்று அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் கோரிக்கை விடுத்தன.
இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு ‘விமான கடத்தல் தடுப்பு மசோதா 2016’-ஐ பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்தது. இந்த புதிய மசோதா நேற்று பாராளுமன்றத்தில் அனைத்து உறுப்பினர்களின் ஒரு மனதான ஆதரவுடன் குரல் ஓட்டுமூலம் நிறைவேறியது.
புதிய மசோதாவில், பணயக் கைதிகள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் யார் கொல்லப்பட்டாலும் இந்த செயலில் ஈடுபட்ட கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டு இருக்கிறது. அதாவது விமான நிலையத்தின் எந்தவொரு ஊழியர் கொல்லப்பட்டாலும், பிடிபடும் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை உறுதி என்ற புதிய அம்சம் இந்த மசோதாவில் சேர்க்கப்பட்டு உள்ளது.
அதேபோல் விமான கடத்தலின்போது, உயிர்ச்சேதம் இல்லாவிட்டாலும் கூட, கடத்தியவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கவும், கடத்தலில் ஈடுபடுவோருடைய அசையும் மற்றும் அசையா சொத்துகளை பறிமுதல் செய்யவும் இந்த மசோதா வகை செய்கிறது.
இந்த மசோதா குறித்து பேசிய சில எம்.பி.க்கள் விமான கடத்தலை தடுக்க சிறப்பு அதிரடிப்படையை உருவாக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அதற்கு சிவில் விமான போக்குவரத்து மந்திரி அசோக் கஜபதிராஜூ பதில் அளிக்கையில், நிச்சயம் அதற்கான சிறப்பு படை உருவாக்கப்படும். எனினும் அது எந்த மாதிரியான படை என்பதை தெரிவிக்க இயலாது. அதுபற்றி அவையில் விவாதிப்பதும் நல்லதல்ல என்றார்.
இந்த மசோதா டெல்லி மேல்-சபையில் ஏற்கனவே நிறைவேறிவிட்டதால் விரைவில் சட்டவடிவம் பெற்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.