ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்; யார் எதிர்த்துப் போட்டியிட்டாலும் திமுக அமோக வெற்றி பெறும்: ஸ்டாலின்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யார் எதிர்த்துப் போட்டியிட்டாலும் திமுக அமோக வெற்றி பெறும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்திருந்தவர்களிடம் நேர்காணல் நடந்து முடிந்த பிறகு, சென்னை, அண்ணா அறிவாலயத்தில், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:
செய்தியாளர்: திமுக சார்பில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட எதிர்பார்த்ததை விட அதிகமானோர் விருப்பமனு அளித்துள்ள நிலையில், நேர்காணலில் என்ன முடிவு எடுக்கப்பட்டது?
ஸ்டாலின்: உங்கள் கட்சி சார்பாகவா, நம் கட்சி சார்பாகவா?
செய்தியாளர்: நம் கட்சியின் சார்பாக நடந்துள்ள நேர்காணலில் வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டு விட்டாரா? வேட்பாளர் யார் என்பதை நாங்கள் தெரிந்து கொள்ள முடியுமா?
ஸ்டாலின் : ஆம், நம் கட்சி சார்பாக வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடந்து முடிந்துள்ளது. அதனடிப்படையில் அனைவருடனும் நாங்கள் கலந்து பேசி இருக்கிறோம். இன்று இரவு அல்லது நாளை காலையில் தலைவர் கலைஞர் அவர்களிடம் கலந்து பேசி இறுதி முடிவு எடுத்து, அதன் பிறகு நாளை அறிவிக்கப்படும்.
செய்தியாளர்: திமுகவின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?
ஸ்டாலின்: திமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று நான் ஏற்கனவே தெரிவித்து இருக்கிறேன். அதே நிலைதான் இப்போதும் தொடர்கிறது.
செய்தியாளர்: அதிமுக மூன்று பிரிவாக பிரிந்துள்ள நிலை பற்றி உங்கள் கருத்து என்ன?
ஸ்டாலின்: அவர்கள் எத்தனை பிரிவாக இருந்தாலும், அது அவர்களுடைய பிரச்சினையே தவிர எங்களுடைய பிரச்சினையல்ல. எங்களை பொறுத்தவரையில் திராவிட முன்னேற்றக் கழகம் இந்த தேர்தலில் அமோகமாக வெற்றி பெறும்.
செய்தியாளர்: இந்த இடைத்தேர்தலில் மக்களிடம் எந்தெந்த பிரச்சினைகளை எடுத்து வைத்து உங்களுடைய பிரச்சாரம் இருக்கும்? பிரச்சார வியூகம், வெற்றி வியூகங்கள் எப்படி இருக்கும்?
ஸ்டாலின்: ஊடகத்துறையை சேர்ந்த நீங்கள் எடுத்து வைக்காத பிரச்சினைகளை எல்லாம் நாங்கள் மக்களிடத்தில் எடுத்து வைப்போம்.
செய்தியாளர்: திமுக வேட்பாளருக்கு ஆதரவு தர வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தீர்கள். அவர்களும் ஆலோசனை செய்துள்ளனர். அந்த அழைப்பு எந்த அளவில் இருக்கிறது?
ஸ்டாலின்: கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் இன்றைக்கு நடந்து கொண்டிருக்கக்கூடிய, தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருக்கக்கூடிய சசிகலாவின் பினாமி ஆட்சிக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும், ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில், திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று நேற்றைக்கு நான் அழைப்பு விடுத்திருந்தேன். அந்த அழைப்பை ஏற்று வரக்கூடியவர்களை வரவேற்க திமுக தயாராக இருக்கிறது என்றும் நான் தெளிவாக எடுத்துச் சொல்லியிருந்தேன். அந்த வகையில் வரக்கூடிய கட்சிகளை திமுக நிச்சயம் வரவேற்கும்.
செய்தியாளர்: டிடிவி.தினகரன் அதிமுக சார்பில் போட்டியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளதே?
ஸ்டாலின்: நான் ஏற்கனவே சொன்னபடி, அந்த கட்சியை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. அது அவர்களுடைய பிரச்சினை. யார் போட்டியிட்டாலும் திமுக எதிர்த்து நிச்சயமாக வெற்றி பெறும்.
செய்தியாளர்: சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்போவதாக ஏற்கனவே சொல்லியிருந்தீர்கள், நாளை மறுநாள் பட்ஜெட் தாக்கல் நடைபெறவுள்ள நிலையில் அதன் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்ன?
ஸ்டாலின்: நாங்கள் ஏற்கனவே அதற்கான கடிதம் கொடுத்திருக்கிறோம். சட்டமன்றம் கூடுகின்றபோது நிச்சயமாக இந்தப் பிரச்சினையை நாங்கள் எழுப்புவோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.