தமிழக காங்கிரஸ் புதிய தலைவர் யார்?: சோனியாகாந்தியுடன் கராத்தே தியாகராஜன் சந்திப்பு
தமிழக சட்டமன்ற தேர்தலை தி.மு.க.வுடன் இணைந்து காங்கிரஸ் சந்தித்தது. தி.மு.க.விடம் இருந்து பிடிவாதமாக 41 தொகுதிகளை வாங்கி போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் 8 இடங்களில் மட்டும் வெற்றியை பெற்றது. காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு மாநில தலைவராக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தான் காரணம் என்று முன்னாள் தலைவர்களும், காங்கிரஸ் நிர்வாகிகளும் அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு புகார் மனு அனுப்பினர்.
தங்களது தொகுதிக்கு இளங்கோவன் பிரசாரத்துக்கு வரவில்லை என்றும், மிகமோசமான முறையில் எதிர்க்கட்சி தலைவர்களை இளங்கோவன் விமர்சனம் செய்ததே தோல்விக்கு காரணம் என்றும் காங்கிரஸ் வேட்பாளர்களும் காங்கிரஸ் மேலிடத்தில் புகார் தெரிவித்து இருந்தனர். இதைத்தொடர்ந்து புகார்கள் குறித்து விளக்கம் அளிக்க வருமாறு காங்கிரஸ் மேலிடம் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து டெல்லி சென்ற ஈ.வி.கே.எஸ். இளங்கோவனிடம் காங்கிரஸ் தலைமை சார்பில், ‘கட்சியின் நலன் கருதி நீங்கள் ராஜினாமா செய்து விடுங்கள்’ என்று தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இளங்கோவன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இளங்கோவனை மாநில தலைவராக நீடிக்கும்படி அவரது ஆதரவாளர்கள் டெல்லிக்கு சென்று முறையிட்டும், இளங்கோவனின் ராஜினாமாவை காங்கிரஸ் தலைமை ஏற்றுக்கொண்டது.
அடுத்த கட்டமாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக யாரை நியமனம் செய்யலாம் என்பது குறித்து காங்கிரஸ் தலைமை ஆலோசனையில் ஈடுபட்டது. அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி வெளிநாட்டில் இருந்து டெல்லி திரும்பியதும், தமிழக மூத்த காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார். தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சோனியாகாந்தியையும் சந்தித்து பேசினர்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை எச்.வசந்தகுமார், பீட்டர் அல்போன்ஸ், செல்லக்குமார், தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் ஆகியோர் சந்தித்து தமிழக அரசியல் நிலவரம், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி குறித்து பேசினர்.
இந்தநிலையில், முன்னாள் மத்தியமந்திரி ப.சிதம்பரத்தின் ஆதரவாளரும், தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவருமான கராத்தே தியாகராஜன் நேற்று டெல்லி சென்று சோனியாகாந்தியை சந்தித்து பேசினார். அப்போது அவர் தமிழக காங்கிரஸ் கட்சியில் நிலவும் சூழ்நிலை குறித்து எடுத்து கூறினார்.
தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்து கருத்துக்களை கேட்டு வரும் சோனியாகாந்தி விரைவில் தமிழக காங்கிரஸ் தலைவர் யார்? என்பதை அறிவிக்க இருக்கிறார்.
தற்போதையை சூழ்நிலையில் பீட்டர் அல்போன்ஸ், திருநாவுக்கரசர், எச்.வசந்தகுமார் ஆகியோர் இடையே மாநிலத்தலைவர் பதவியை கைப்பற்ற பலத்த போட்டி எழுந்துள்ளது. அதேநேரத்தில் ப.சிதம்பரம் தனது ஆதரவாளர்களில் ஒருவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைமையை வலியுறுத்தி வருகிறார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.