பா.ஜ.க. அரசுக்கு நேசமான ஆட்சியினால் அதிக நிதியை பெற முடியாமல் போனது ஏன்?: கருணாநிதி கேள்வி
தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நிதிநிலை அறிக்கை விவாதத்துக்கு கடந்த ஜூலை 29-ந் தேதி பதிலளித்த நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேரவையில், ஜெயலலிதா பெற்ற வெற்றி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி என்று சொல்லி இருக்கிறார்.
சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. பெற்ற வெற்றி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி அல்ல. 1.1 சதவிகித வெற்றி. அதாவது தி.மு.க. அணிக்கும், அ.தி.மு.க. அணிக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் அவ்வளவுதான். அ.தி.மு.க.வினர் உள்பட யாரும் எதிர்பாராத வெற்றி என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்.
தமிழக அரசின் 22 துறைகளுக்கு இந்த நிதிநிலை அறிக்கையிலே ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற புள்ளி விவரங்களைத் தெரிவித்திருக்கிறார். அதையாவது நிதி அமைச்சர் ஒழுங்காக தெரிவித்திருக்கிறாரா? என்றால் இல்லை. அமைச்சர் தனது பதிலில், “இந்த நிதி ஆண்டில் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறைக்காக மாண்புமிகு அம்மா (முதல்-அமைச்சர் ஜெயலலிதா) ஒதுக்கீடு செய்த தொகை ரூ.121 கோடியே 69 லட்சம்” என்று 29-7-2016 அன்று படித்திருக்கிறார்.
ஆனால் உண்மை என்ன? அதே அமைச்சர் 21-7-2016 அன்று நிதிநிலை அறிக்கையிலே படித்த புள்ளி விவரம் என்ன தெரியுமா? கால்நடை பராமரிப்புத் துறைக்காக மட்டும் ரூ.1,188.97 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று பத்தி 43-ல் படித்திருக்கிறார். அதைத்தவிர பால்வளத் துறை, மீன்வளத் துறை ஆகியவற்றுக்கான ஒதுக்கீடுகள் வேறு இருக்கின்றன. அமைச்சரின் பதில் எந்த லட்சணத்தில் உள்ளது என்பதற்கு இது ஒரு உதாரணமே போதும் என்று கருதுகிறேன்.
இடைக்கால நிதிநிலை அறிக்கையில் வருவாய்ப் பற்றாக்குறை 9 ஆயிரத்து 154.78 கோடி ரூபாயாக இருக்கும் என்று இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சொன்னார்கள். 2016-2017-ம் ஆண்டு திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் வருவாய்ப் பற்றாக்குறை 15 ஆயிரத்து 854.47 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
5 மாதங்களிலேயே இந்த வருவாய்ப் பற்றாக்குறை 6 ஆயிரத்து 699.69 கோடி ரூபாய் அதிகமாகி உள்ளது என்று நான் குறிப்பிட்டிருந்தேன். 12 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் தமிழ்நாட்டிற்கு கூடுதலாக கிடைத்திருந்து, மாநில கூடுதல் செலவு 2 ஆயிரத்து 600 கோடி ரூபாய் குறைந்திருந்தால், 2015-2016-ம் ஆண்டில் வருவாய்ப் பற்றாக்குறைக்கு பதில், வருவாய் உபரியாக இருந்திருக்கும் என்று விளக்கமளிக்கிறார். “அத்தைக்கு மீசை முளைத்தால்தானே சித்தப்பா?” வருவாயை ஏன் பெருக்கவில்லை? செலவை ஏன் கட்டுக்குள் கொண்டு வரவில்லை? வருவாய்ப் பற்றாக்குறை அதிகமானது ஏன்? என்பதுதான் கேள்வி. அதைச் செய்யாததுதான் அ.தி.மு.க. அரசின் நிதி மேலாண்மை குறைபாடு.
பீகார், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு மத்திய அரசால் அதிக அளவில் நிதி வழங்கப்படுகிறது என்று அமைச்சர் கூறுவது, ஒப்புதல் வாக்குமூலமாகவே உள்ளது. பீகார் ஆட்சியும், உ.பி. ஆட்சியும் மத்திய பா.ஜ.க.வுக்கு எதிரானவை; எதிரான ஆட்சிகள் அதிக நிதியைப் பெற முடிகிற போது, மத்திய பா.ஜ.க.வுக்கு நேசமான ஆட்சியினால் அதிக நிதியைப் பெற முடியாமல் போனது ஏன்?
மத்திய அரசுடன் கடுமையாக வாதாடி அதிக அளவில் நிதியைப் பெற முடியவில்லையா? அதிக நிதி கேட்டு, உங்கள் முதல்-அமைச்சர் எத்தனை முறை டெல்லிக்குப் படை எடுத்தார்? சென்னையிலே உங்கள் முதல்வர் வீட்டிற்கே பிரதமர் வந்தாரே, நிதி அமைச்சர் வந்தாரே, பீகார், உத்தரப்பிரதேசம் மாநிலங்களைப் போல எங்களுக்கும் அதிக அளவில் நிதி வேண்டுமென்று நெருக்கடி கொடுக்கும் வகையில், கடுமையாக சொல்லியிருக்கலாம் அல்லவா?
மத்திய நிதி அமைச்சரை, தமிழக நிதி அமைச்சர் எத்தனை முறை சென்று சந்தித்தார்? இதுதான் எதிர்க்கட்சிகளின் கேள்வி. இதற்குத்தான் நிதி அமைச்சர் பதில் அளித்திருக்க வேண்டுமே தவிர, பரிதாபமாக அவரே ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பதற்காக அல்ல! “பலமுறை படை எடுத்தோம்; பாரதிரப் போராடினோம்; பலமாக வாதாடினோம்; நிதியைப் பெற்றோம்!” என்ற பதிலைத்தான் எதிர்க்கட்சிகள் எதிர்பார்க்கின்றன.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.