மத்திய அமைச்சர்களின் குற்றச்சாட்டிற்கு ஜெயலலிதா நேரடியாக பதில் சொல்லாதது ஏன்?- கருணாநிதி கேள்வி.
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
மத்திய மின்துறை அமைச்சர், பியுஷ் கோயல் டெல்லியில் 26–3–2016 அன்று பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, தமிழக மின் திட்டங்கள் குறித்து தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை தன்னால் தொடர்பு கொள்ள முடிய வில்லை என்றும், மின்துறை அமைச்சரிடம் ஒரு முறை பேசியபோது, “அம்மாவிடம் கூறுகிறேன்” என்று சொன்னதாகவும், ஆனால் அதன் பின் பல மாதங்கள் ஆகியும் தமிழக அரசிடமிருந்து பதிலே வரவில்லை என்றும் பேசியிருந்தார்.
அதே அமைச்சர், ஏற்கனவே, 3–3–2016 அன்று தமிழக மின் உற்பத்தியை மேம்படுத்துவது குறித்து பேச்சு நடத்த முதல் அமைச்சர் ஜெயலலிதா முன் வரவில்லை என்ற கருத்தையும், தமிழக மின்துறை அமைச்சரும் ஆலோசனை நடத்த முன் வரவில்லை என்ற கருத்தையும் தெரிவித்திருந்தார்.
மத்திய மின் துறை அமைச்சர் பியுஷ்கோயலை தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை தானும் சந்திக்க முடியவில்லை என்று குறிப்பிட்டார்.
மத்திய அமைச்சர்களின் குற்றச்சாட்டுக்கு தமிழக முதல்– அமைச்சர் ஜெயலலிதா எந்தப் பதிலும் விளக்கமும் கூறாமல் இரண்டு அமைச்சர்களை விட்டு அறிக்கைகள் கொடுக்கச் சொல்லியிருக்கிறார். அந்த அறிக்கைகளும், மத்திய அமைச்சர்களை வசைபாடும் அறிக்கைகளாக இருக்கிறதே தவிர, அவர்கள் நேரடியாகச் சாட்டிய குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூறுவதாக இல்லை. குறிப்பாக 2014–ம் ஆண்டு பா.ஜ.க. மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு, 9 முறை பிரதமரையும், மத்திய அமைச்சர்களையும் சந்தித்திருப்பதாகக் கூறியிருக்கிறார்.
இதில் 2014–ம் ஆண்டு பா.ஜ.க. பதவியேற்றவுடன் மரியாதைச் சந்திப்புக்காக ஒரே ஒரு முறை டெல்லியில் சென்று பிரதமரைப் பார்த்ததைத் தவிர மற்ற எட்டு முறையும், பிரதமரும், மத்திய அமைச்சர்களும் சென்னையிலே முதல்– அமைச்சர் வீட்டிலும், நிகழ்ச்சிகளிலும், பொது இடங்களிலும் சந்தித்திருக்கிறார்களே தவிர, தமிழகத்தின் கோரிக்கைகளை விவாதித்திடும் நோக்கில் ஒரு முறை கூட தமிழக முதல்– அமைச்சர் டெல்லி சென்று பிரதமரையோ, மத்திய அமைச்சர்களையோ சந்திக்க வில்லை என்பது நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கொடுத்த அறிக்கைகளிலிருந்தே தெளிவாகிறது.
ஒருவேளை இப்போது அ.தி.மு.க. வில் உள்ள உட்கட்சிச் சூழலில் முதல்–அமைச்சரைப் பிரச்சினையில் மேலும் சிக்கவைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த அறிக்கையை நிதியமைச்சர் பன்னீர்செல்வம் கொடுத்திருப்பதைப் போலத்தான் தெரிகிறது.
இன்னும் கூற வேண்டுமேயானால், மத்திய அமைச்சர் ஜவடேகரும் தமிழக முதல்– அமைச்சர் ஜெயலலிதாவைச் சந்திப்பது கடினம் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். ஏன் ஜெயலலிதாவுக்காக அறிக்கை கொடுத்துள்ள அ.தி.மு.க. வின் மூத்த அமைச்சர்களான இந்த இருவருமே முதல்–அமைச்சர் ஜெயலலிதாவைச் சுலபமாகச் சந்திக்க முடியுமா?
ஜெயலலிதா அவருடைய அமைச்சரவையிலே உள்ளவர்களையே சந்திக்க இயலாது என்கிற போது, மத்திய அமைச்சர்களையா சந்திக்கப் போகிறார்? நத்தம் விசுவநாதன் சென்ற காரையே போயஸ் தோட்டத்துக்குள் தடுத்தார்கள் என்பது தான் இன்றைய ஏடுகளில் வந்துள்ள செய்தி.
மதுரவாயல் –துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்தை தமிழக அரசு காழ்ப்புணர்ச்சியின் காரணமாக முடக்கி வைத்திருப்பது தானே? எதற்காக அந்தத் திட்டம் முடக்கி வைக்கப்பட்டுள்ளது என்று நான் விரிவாக தெரிவித்திருந்தேனே? அந்தத் திட்டம் பற்றிப் பேச வேண்டு மென்று மத்திய அரசின் சார்பில் தமிழக அரசுக்கு வேண்டுகோள் வந்ததா இல்லையா? அதற்காவது தமிழக அரசு ஒப்புக் கொண்டதா?
மத்திய அமைச்சர்களின் குற்றச்சாட்டுகளையும் நடு நிலையாளர்கள் படிக்கட்டும் அதற்கு தமிழகத்தின் இரண்டு மூத்த அமைச்சர்கள் கொடுத்த விளக்கத்தையும் படிக்கட்டும் –முடிவுக்கு வரட்டும்.
மத்திய அமைச்சர்களின் குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானது என்றால், முதலமைச்சரே விளக்கம் அளித்திருக்க மாட்டாரா என்ன? முதல்– அமைச்சரைப்பற்றி மத்திய அமைச்சர்களின் நேரடியான குற்றச்சாட்டுகளுக்கு, முதல்– அமைச்சரே பதிலளித்திட முன்வருவது தானே முறை?
எப்படியோ அ.தி.மு.க. வின் ஐந்தாண்டு கால ஆட்சியில் தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக அ.தி.மு.க. ஆட்சியினரும் திட்டம் வகுத்து எதுவும் செய்ய வில்லை; மத்திய அரசு தன்னிச்சையாக மாநிலத்திற்கு உதவிட முன் வந்தும் அதையும் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பது இந்த ஒரு நிகழ்வின் மூலம் நிரூபணமாகிறது அல்லவா?
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.