மனிதநேய மக்கள் கட்சியிடமிருந்து உளுந்தூர் பேட்டையைத் திமுக திரும்பப் பெற்றது ஏன்? பரபரப்புத் தகவல்கள்.
தி.மு.க. கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு தொண்டாமுத்தூர், ஆம்பூர், ராமநாதபுரம், நாகப்பட்டிணம், உளுந்தூர் பேட்டை ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
இந்த நிலையில் திடீரென உளுந்தூர்பேட்டை தொகுதியை மனிதநேய மக்கள் கட்சி தி.மு.க.வுக்கு விட்டு கொடுத்தது. இதையடுத்து தி.மு.க. வேட்பாளராக திருநாவலூர் ஒன்றிய செயலாளரான ஜி.ஆர்.வசந்தவேல் அறிவிக்கப்பட்டுள்ளார்.
உளுந்தூர்பேட்டை தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு தகுதியான வேட்பாளர் இல்லாததால் இத்தொகுதியை தி.மு.க.விடம் திருப்பி கொடுத்ததாக கட்சி கூறியுள்ளது. ஆனால் இதற்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
தே.மு.தி.க.வை தொடங்கிய விஜயகாந்த் 2006-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக தேர்தலை சந்தித்தார். தமிழ்நாடு முழுவதும் அவரது கட்சி தனித்து போட்டியிட்டது.
விஜயகாந்த் விருத்தாச்சலம் தொகுதியில் முதல் முறையாக வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். அவரது கட்சி சார்பில் விஜயகாந்த் மட்டுமே சட்டசபைக்கு சென்றார்.
கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்தது. விஜய காந்த் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு எளிதாக வெற்றி பெற்றார்.
ஆனால் தற்போது விஜயகாந்த் மக்கள் நல கூட்டணியில் சேர்ந்துள்ளதால் மீண்டும் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி கிடைக்குமா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
உளுந்தூர்பேட்டை தொகுதியில் விடுதலை சிறுத்தை கட்சிக்கு செல்வாக்கு உள்ளது. அதே போல் தே.மு.தி.க.வுக்கு அமைப்பு ரீதியாக அதிக பலம் உள்ளது. எனவே விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்டால் பாதுகாப்பாக இருக்கும் என்று முடிவு செய்துள்ளார்.
உளுந்தூர்பேட்டை தொகுதியில் விஜயகாந்த் போட்டியிட்டால் மனிதநேய மக்கள் கட்சியால் அவரை சமாளிக்க முடியாது என கருதியே தி.மு.க. இந்த தொகுதியை அக்கட்சியிடம் இருந்து கேட்டு பெற்று உள்ளது.
வேட்பாளராக திருநாவலூர் ஒன்றிய தி.மு.க. செயலாளரான ஜி.ஆர்.வசந்தவேலுவை களத்தில் இறக்கி உள்ளது.
ஒரு வேளை விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் நிற்பது உறுதியானால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளரை விட பலம் வாய்ந்த வேட்பாளரை நிறுத்தவும் தி.மு.க. முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுபற்றி மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லாவிடம் கேட்ட போது உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட வேண்டாம் என்று முடிவு எடுத்துள்ளோம். ஆனால் அதற்கான காரணத்தை இப்போது கூற முடியாது என்றார்.
அவர் மேலும் கூறுகையில், உளுந்தூர்பேட்டை தொகுதியை திருப்பிக் கொடுத்ததால் வேறு தொகுதியை கேட்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. ஏனென்றால் தி.மு.க. வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டது. எனவே இப்போது வேறு தொகுதி கேட்பது நாகரீகமாக இருக்காது என்றும் தெரிவித்தார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.