அருண்ஜெட்லி பற்றி விமர்சனம்: சுப்பிரமணியசாமி மீது பா.ஜனதா அதிருப்தி
பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவர் சுப்பிரமணியசாமி.
டெல்லி மேல்-சபை எம்.பி.யான இவர் ஏற்கனவே ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனை விமர்சித்து இருந்தார். அதை தொடர்ந்து தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சக்திகாந்ததாஸ் ஆகியோர் மீது சுப்பிரமணியசாமி பல்வேறு விமர்சனங்களை எழுப்பினார்.
ஆளும் பா.ஜனதாவில் அங்கம் வகிக்கும் மூத்த தலைவர் ஒருவரே மத்திய அரசால் நியமிக்கப்பட்டவர்களை விமர்சிப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து கட்சியில் இருப்பவர்கள் கட்டுப்பாடுடன் பேச வேண்டும் என்று மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி தெரிவித்து இருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையிலும், அவரை மறைமுகமாக தாக்கும் வகையிலும் சுப்பிரமணியசாமி சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார். சீனாவுக்கு சென்ற போது அருண்ஜெட்லியின் ஆடை அலங்காரத்தையும் அவர் மறைமுகமாக விமர்சித்தார். இது பற்றி டுவிட்டரில் அவர் கூறியதாவது:-
கட்டுப்பாடுடனும், ஒழுக்கத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று எனக்கு தேவையற்ற அறிவுரைகளை சிலர் சொல்கிறார்கள். அவர்களுக்கு ஒரு விஷயம் தெரியவில்லை. ஒரு வேளை நான் கட்டுப்பாடு இல்லாமல் பல விஷயங்களை பேசினால் இப்போது உள்ள சூழல் ரண களமாக மாறிவிடும்.
வெளிநாடுகளுக்கு செல்லும் நமது மந்திரிகளுக்கு ஆடை விஷயத்தில் அக்கறை செலுத்துமாறு பா.ஜனதா தலைமை அறிவுறுத்த வேண்டும். ஆங்கிலேயர் பாணியில் கோட் மற்றும் டை அணிந்து இருக்கும் அவர்களை பார்ப்பதற்கு ஓட்டல் ஊழியர்களை போல் தோற்றமளிக்கின்றனர்.
இந்திய பாரம்பரியமிக்க நவீன உடைகளை அணியுமாறு மத்திய மந்திரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
அருண்ஜெட்லி பற்றிய இந்த விமர்சனத்தால் சுப்பிரமணியசாமி மீது பா.ஜனதா தலைமை கடும் அதிருப்தி அடைந்துள்ளது. மிகவும் முக்கியமான மந்திரி ஒருவரையே விமர்சித்து இருப்பதால் பா. ஜனதா தலைமை இந்த விஷயத்தை மிக கவனமாக பார்க்கிறது.
அதே நேரத்தில் சுப்பிரமணியசாமி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க பா.ஜனதா தலைமை தயாராக இலை என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.