சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிக்க கோரும் வழக்கு அரசியல் சட்ட பெஞ்சுக்கு மாற்றம்: சுப்ரீம் கோர்ட்டு தகவல்
சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க கோரும் வழக்கை அரசியல் சட்ட பெஞ்சுக்கு மாற்ற வாய்ப்பு இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்தனர்.
சபரிமலை அய்யப்பன் கோவிலில், 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இதை எதிர்த்தும், அனைத்து பெண்களையும் கோவிலுக்குள் அனுமதிக்க உத்தரவிடக்கோரியும் இந்திய இளம் வக்கீல்கள் சங்கம் என்ற அமைப்பு, சுப்ரீம் கோர்ட்டில் பொதுநலன் மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த மனு, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சி.நாகப்பன், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டு வருகிறது. சபரிமலை கோவிலை நிர்வகிக்கும் திருவாங்கூர் தேவசம் போர்டு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கே.கே.வேணுகோபால், ‘பல்லாண்டு கால மத நம்பிக்கையில் கோர்ட்டு தலையிடுவது, அந்த நம்பிக்கைக்கு இழைக்கப்படும் அநீதி என்று முன்பு ஒரு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. எனவே, மத நம்பிக்கையை கோர்ட்டு உள்பட யாருமே கேள்வி கேட்க முடியாது’ என்று கூறி இருந்தார்.
இந்நிலையில், நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு, நேற்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:-
கோவில் என்பது பொதுவான ஆன்மிக தலம். அங்கு வரும் பெண்களுக்கு அனுமதி மறுக்க முடியாது. அரசியல் சட்டத்தில் பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, அவர்களுக்கு அனுமதி மறுப்பது, அடிப்படை உரிமைகளை மீறும் செயல். இந்த பிரச்சினையின் தீவிரத்தன்மையை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம்.
எனவே, இந்த வழக்கு அரசியல் சட்ட பெஞ்சுக்கு அனுப்புவதற்கு உகந்தது என்று நாங்கள் நினைக்கக்கூடும். அப்படி மாற்றுவதாக இருந்தால், விரிவான உத்தரவை பிறப்பிப்போம். இந்த பிரச்சினை இதற்கு முன்பு எழவில்லை என்று கருதுகிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
அடுத்தகட்ட விசாரணையை நவம்பர் 7-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.